வன்னி ஊடகவியலாளரின் புகைப்படங்களுக்கு ஐ.நா அங்கீகாரம்; விசேட அறிக்கையுடன் இணைந்து கட்டுரையும் வெளியீடு
இலங்கையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் வெளியிடப்பட்ட விசேட அறிக்கைக்காக, வன்னியில் முன்னணி தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் எடுத்த புகைப்படங்களை ஐக்கிய நாடுகள் சபை பயன்படுத்தியுள்ளது.
மே 21 அன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட “பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் மரபு இலங்கையை ஆட்டிப்படைக்கிறது” (Legacy of enforced disappearances haunts Sri Lanka) என்ற கட்டுரைக்கு புகைப்பட ஊடகவியலாளர் கனபதிப்பிள்ளை குமணன் எடுத்த புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையில் யுத்தத்தின் போது பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு என்ன நடந்தது எனக் கேட்டு இலங்கையில் நீண்ட காலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தைச் சேர்ந்த தாய்மார்களின் அனுபவங்களை மையப்படுத்தி இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உள்ளுர் பொறுப்புக்கூறல் இல்லாமை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையுடன் இணைந்து இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
“ஒருவேளை நான் மீண்டும் என் மகனைப் பார்ப்பேன் அல்லது குறைந்தபட்சம் அவன் எங்கே புதைக்கப்பட்டான் என்பதைக் கண்டுபிடிப்பேன்.” கடந்த 2009ஆம் ஆண்டு முதல் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை கண்டுபிடிக்கக் கோரி முடிவில்லாத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 72 வயதான தாய் ஒருவர் இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள கட்டுரையில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அகதிகள் முகாம்களுக்கு, கிராமங்களில் உள்ள வெகுஜன புதைகுழிகளுக்குச் சென்றதோடு, ஏனைய தாய்மார்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் மனைவிமாருடன் 2,650 நாட்களைக் கடந்து அமைதியான ஆர்ப்பாட்டங்களை நடத்தி வரும் அவர், அதிகாரிகளிடம் கேட்கின்றார்: எங்கள் பிள்ளைகள் எங்கே? எங்கள் கணவர்மார் எங்கே?
இலங்கையில் உள்நாட்டுப் போர் 15 ஆண்டுகளுக்கு முன்பே முடிவுக்கு வந்தாலும், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உண்மைக்காகவும், தங்கள் அன்புக்குரியவர்களுக்கான நீதிக்காகவும் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஒன்றரை தசாப்தங்களுக்குப் பிறகும், அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் தலைவிதி அல்லது இருப்பிடம் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
“பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் மரபு இலங்கையை ஆட்டிப்படைக்கிறது” என்ற தலைப்பில் வெளியிடப்படடுள்ள இந்த கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள இரண்டு புகைப்படங்களின் உரிமையாளரான கனபதிப்பிள்ளை குமணன் பொதுவாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி வன்னியில் பல ஆண்டுகளாக அறிக்கையிட்டு வருகின்றார்.
ஊடகங்களில் பாதுகாப்புப் படையினரின் அச்சுறுத்தல்களுக்கு மேலதிகமாக, மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு போலி மரக் கடத்தலை அம்பலப்படுத்தியதற்காக அவர் தனது தொழில்முறை நண்பரான சண்முகம் தவசீலனுடன் சேர்ந்து கடுமையான தாக்குதலையும் சந்திக்க வேண்டியிருந்தது.
வன்னியில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான பல வன்முறைச் சம்பவங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.