கேப்பாப்பிலவில் போராட்டத்தில் ஈடுபட்ட இரு பெண்களை சந்தித்த ஜனாதிபதி; அதிரடியாக வழங்கிய உத்தரவு

கேப்பாப்பிலவில் போராட்டத்தில் ஈடுபட்ட இரு பெண்களை சந்தித்த ஜனாதிபதி; அதிரடியாக வழங்கிய உத்தரவு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) முல்லைத்தீவு மாவட்டத்தில் “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்துக்குச் சென்றபோது ஜனாதிபதியைச் சந்திக்க வேண்டும் எனக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள், பாடசாலைக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அறிந்த வட மாகாண ஆளுநர் பி. எஸ்.எம். சார்ள்ஸ், இரு பெண்களும் இருந்த இடத்துக்குச் சென்று அவர்களின் பிரச்சினை தொடர்பாக வினவ, அதன்போது அவர்களின் பிரச்சினையை ஜனாதிபதியிடம் முன்வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

அதனையடுத்து, வட மாகாண ஆளுநர் அந்த இரு பெண்களை பற்றி ஜனாதிபதிக்கு அறிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போராட்டம் நடைபெற்ற இடத்துக்குச் சென்று அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார்.

காணிப் பிரச்சினை காரணமாக தாம் உட்பட கேப்பாப்பிலவு கிராமத்தில் வசிக்கும் 56 குடும்பங்கள் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், எனவே இதற்கு உடனடியாக தீர்வு காண ஏற்பாடு செய்யுமாறும் அந்த பெண்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தப் பிரச்சினையை விரைவாகக் கண்டறிந்து அதற்குத் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், வட மாகாணத்தில் பெருமளவிலான காணிகளை விடுவிக்க அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், எஞ்சியுள்ள காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதே தமது எதிர்பார்ப்பு எனவும் குறிப்பிட்டார்.

போராட்டத்தில் கலந்துகொண்ட தம்மை சந்தித்து, தமது பிரச்சினைகளைக் கேட்டறிந்து தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்தமைக்கு, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தமது நன்றியை வெளிப்படுத்தினர்.

CATEGORIES
Share This