இலங்கையில் ஹெலிகாப்டர் பயணத்தை முற்றிலும் தவிர்த்த ஈரான் ஜனாதிபதி; அஜர்பைஜான் விபத்தில் சிக்கியது எப்படி?
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்டவர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்ட சம்பவம் முழு உலக நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த விபத்தில் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையிலேயே, கடந்த மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு வந்திருந்த போது, ஹெலிகாப்டர் பயணத்தை முற்றிலும் தவிர்த்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை விஜயத்தின் போது பாதுகாப்பு மற்றும் சுயதணிக்கையின் அடிப்படையில் அவர் ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 நிமிடங்களில் உமா ஓயா பகுதிக்கு செல்ல திட்டம்
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட தூதுக் குழுவினர் (24.04.2025) வந்திறங்கிய விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கியது.
ஈரான் ஜனாதிபதியை மத்தள விமான நிலையத்தில் இருந்து உமா ஓயா நிகழ்வு திட்டத்தை திறந்து வைப்பதற்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்வதற்கே முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.
ஏனெனில், ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயத்திற்கான பயண அட்டவணையின்படி, ஈரான் தரப்பு மத்தள விமான நிலையத்தில் இருந்து உமா ஓயா பகுதிக்கு பயணிக்க 20 நிமிடங்களே ஒதுக்கப்பட்டிருந்தன.
மத்தள விமான நிலையத்தில் இருந்து உமா ஓயா பகுதிக்கு இவ்வளவு குறுகிய காலத்தில் வீதி மார்க்கமாக பயணிக்க முடியாது என உள்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் உறுதிப்படுத்தியிருந்தனர்.
எனினும், ஈரான் ஜனாதிபதி இந்த ‘ஹெலிகொப்டர் பயணத்தை’ கடுமையாக நிராகரித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலமுறை நடந்த ஒத்திகைகள்
இந்த விடயம் தொடர்பாக பல ஒத்திகைகள் நடத்தப்பட்டது.
எனினும், ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் ஈரான் ஜனாதிபதியை உமா ஓயா பகுதிக்கு அழைத்துச் செல்ல முடியாது என்பது உறுதி செய்யப்பட்டது.
ஆனால் ஈரான் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக இலங்கை வந்திருந்த அந்நாட்டு அதிகாரிகள் மத்தய விமான நிலையத்தில் இருந்து 20 நிமிடங்களில் பயணிக்க முடியும் என மதிப்பிட்டிருந்தனர்.
எவ்வாறாயினும், அது சாத்தியமில்லை என உள்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருந்த போதிலும், இறுதியில் ஈரான் அதிகாரிகளின் கூற்றுக்கு உடன்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் இரு தரப்பினர்களுக்கும் இடையில் ஏற்படும் கருத்து வேறுபாடு ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தை பாதிக்கலாம் என கருதப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரான் ஜனாதிபதி மத்தள விமான நிலையத்திற்கு வருகை தந்த பின்னர், அங்கிருந்து உமா ஓயா திட்டப் பகுதிக்கு செல்லும் வீதி வழமையான போக்குவரத்திற்கு முற்றாக மூடப்பட்டது.
எவ்வாறாயினும், இறுதியில் மத்தள விமான நிலையத்தில் இருந்து உமா ஓயா பகுதிக்கு ஈரான் ஜனாதிபதி ஒரு மணிநேரம் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்புக்கும் ஹெலிகாப்டரில் வர மறுப்பு
இதனையடுத்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் தங்கியிருக்கும் கொழும்பில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லும் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் அதுவும் ஈரான் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது.
எனவே, மீண்டும் நெடுஞ்சாலை வழியாக மத்தள விமான நிலையம் வந்த ஈரான் ஜனாதிபதி, அங்கிருந்து கட்டுநாயக்கவிற்கு விமானம் மூலம் அழைத்துவரப்பட்ட பின்னர் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டார்.
கட்டுநாயக்காவில் இருந்து அதிவேக நெடுஞ்சாலை ஊடாக ஈரான் ஜனாதிபதி தங்கியிருந்த விடுதிக்கு அழைத்து வரப்பட்டார்.
இலங்கைக்கான விஜயத்தை முடித்துக் கொண்ட ஈரான் ஜனாதிபதி, நெடுஞ்சாலை ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திரும்பியிருந்தார்.
பொருளாதாரத் தடைகளும் காரணமா?
பாகிஸ்தான் விஜயத்தின் பின்னரே ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். பாகிஸ்தான் விஜயத்தின் போதும் அவர் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கான தனது சமீபத்திய விஜயத்தின் போது, ஹெலிகாப்டர் பயணத்தை கடுமையாக மறுத்த ஈரான் ஜனாதிபதி, அஜர்பைஜானின் வடமேற்கு பிராந்தியத்தில் ஹெலிகாப்டர் பயணத்தின் போது விபத்துக்குள்ளானார்.
மோசமான வானிலை காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளும் இந்த விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளதால், ஈரானிய விமானங்கள் உதிரி பாகங்கள் அல்லது புதிய ஏர்ஃப்ரேம்களைப் பெற முடியாமல் உள்ளது.
இதனால் அங்குள்ள ஆகாய மார்க்க போக்குவரத்து சாதனங்கள் பாதுகாப்பற்றவையாக இருக்கலாம் என சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஈரானின் ஜனாதிபதி மற்றும் வெளியுறவு அமைச்சர் பயணித்த பெல் 212 ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை, கடும் மூடுபனியில் மலைகள் வழியாக பறந்து சென்றபோது விபத்துக்குள்ளானதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.