கிழக்கு பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பொலிஸார் அடாவடி

கிழக்கு பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பொலிஸார் அடாவடி

கிழக்கு பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று (18) அனுஷ்டிக்கப்பட்ட வேளையில் அங்கு உட்பிரவேசித்த ஏறாவூர் பொலிஸார் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வினை தடுக்கும் வகையில் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.

தமிழினப்படுகொலை வாரத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் வடக்கு, கிழக்கில் உணர்வுபூர்வமாக நடைபெற்று வருகிறது.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த பொலிஸார் நினைவேந்தலில் கலந்துகொண்டிருந்த மாணவர்களை அச்சுறுத்தியதுடன், அங்கு கட்டப்பட்டிருந்த கொடிகளையும் அறுத்துச் சென்றனர்.

எனினும், பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ச்சியாக முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த நிலையில், மீண்டும் அவ்விடத்துக்கு சென்ற ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர், அங்கிருந்த பதாதைகளை அகற்றியதுடன், ‘இங்கு சுடர் ஏற்றவேண்டாம்’ என்று கூறியும், அங்கிருந்தவர்களை புகைப்படம் எடுத்தும் அச்சுறுத்தியுள்ளனர்.

அத்தோடு, அங்கிருந்த ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தும் வகையில், கையடக்க தொலைபேசிகளில் சீருடை அணிந்திராத பொலிஸார் வீடியோ எடுத்து அச்சுறுத்தியுள்ளனர்.

பொலிஸாரின் அச்சுறுத்தல், அடாவடித்தனத்துக்கு மத்தியிலும் மாணவர்கள் சுடர்களை ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தவிருந்த வேளையில் அதையும் தடுத்துள்ளனர்.

பின்னர், அந்த இடத்தை விட்டு அகன்று பல்கலைக்கழகத்தினுள்ளே செல்லுமாறும், ‘செல்லாவிட்டால் கைது செய்வோம்’ என்றும் மாணவர்களை பொலிஸார் மிரட்டியுள்ளனர்.

அதற்கு அங்கிருந்த ஊடகவியலாளர்கள், “ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறீர்கள்? இதை ஏன் தடுக்கிறீர்கள்” என கேட்க, அதற்கும் சரியான பதில் சொல்லாமல், “மாணவர்களை கலைந்து செல்லச் சொல்லுங்கள்; இல்லையென்றால் இவர்களை கைது செய்வோம்” என அச்சுறுத்தியுள்ளனர்.

அத்தோடு, மாணவர்களின் பெயர்களை சேகரிப்பதில் பொலிஸார் ஆர்வமாக இருந்தார்கள். பொலிஸாரின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கஞ்சியினை பரிமாறும் செயற்பாடுகளை மாணவர்கள் முன்னெடுத்தபோது வீதியால் சென்ற கஞ்சியினை பெற வந்தவர்களை கூட பொலிஸார் அச்சுறுத்தி துரத்தியதை காணமுடிந்தது.

பின், அங்கிருந்த கஞ்சிப் பானை மற்றும் பாத்திரங்கள், பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான மேசை என்பனவற்றை பொலிஸார் அங்கிருந்து எடுத்துச்சென்றனர்.

தமது இறந்த உறவுகளை நினைவுகூருவதற்கான உரிமையினையும் சிங்கள பொலிஸார் மறுத்து முன்னெடுத்த அடாவடித்தனங்களை தாங்கள் கண்டிப்பதாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

அராஜகங்கள் மூலம் எங்களது உணர்வுகளை அடக்க நினைப்பதாகவும் அது ஒருபோதும் முடியாத காரியம் எனவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

CATEGORIES
Share This