குமரபுரத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு மட்டக்களப்பு சிவில் சமூகத்தினர் அஞ்சலி
திருகோணமலை மாவட்டம் குமரபுரத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு மட்டக்களப்பு சிவில் சமூகத்தினர் வெள்ளிக்கிழமை (17) மாலை அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் இன அழிப்பு வாரத்தின் ஏழாவது நாளான வெள்ளிக்கிழமை இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்ற மட்டக்களப்பு சிவில் அமைப்பினரே திருகோணமலை குமரபுரத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதன்போது மட்டக்களப்பு சிவில் சமூக்தின் சார்பில் வி.லவகுமார், அருட்தந்தையர்களான க.ஜெகதாஸ் அடிகளார், த.ஜீவன் அடிகளார், ஜெ.ஜோசப்மேரி அடிகளார், மற்றும் ரஜனி உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அருட்தந்தை க.ஜெகதாஸ் அடிகளார்….. இந்த குமரபுரத்திலே இலங்கை அரசாங்கத்தின் இன அழிப்பாக 1996 ஆம் ஆண்டு விசேட அதிரடிப்படையினரால், பல மக்கள் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்கள். அந்த மக்களுக்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை. அதில் எஞ்சிய மக்கள் இது தொடர்பில் இராணுவத்தினரே படுகொலை செய்ததாக வாக்குமூலமளித்திருந்தார்கள்.
பின்னர் நீதிமன்றத்திலே வழக்குப்பதிவு செய்யப்பட்டு 4 வருடங்களுக்கு முதல் இவ்விடையம் யூரிகள் சபைக்கு பாரம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த யூரிகள் சபை படுகொலை செய்த குற்றவாளிகளை அவர்கள் குற்றவாளிகள் இல்லை என விடுதலை செய்து இச்சம்பவத்திற்கு நீதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படுகின்ற இனப்படுகொலைகளுக்கு இலங்கையிலே நீதி கிடைக்காது என்பதற்கு இது ஒரு நிரூபணமான எடுத்துக்காட்டாகும்.
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்கு நீதி கேட்கின்ற இவ்வேளையிலே 1996 ஆம் ஆண்டு குமரபுரம் பகுதியில் இன அழிப்பு செய்யப்பட்ட மக்களை நாம் நினைவு கூருவதோடு, எமக்கான நீதி சர்வதேசத்திடமிருந்தே கிடைக்க வேண்டும். நாங்கள் உள்நாட்டுக்குள்ளேயே நீதியை எதிர்பார்க்கவில்லை. இலங்கை அரசு ஒருபோதும் தமிழ் மக்களின் இன அழிப்புக்களுக்கு நீதியையும், எதுவித தீர்வையும், தரமாட்டாது, எனவே நாம் சர்வதேசத்திடமே நீதியைக் கேட்டு நிற்கின்றோம். என அவர் இதன்போது தெரிவித்தார்.