ரணில் கூறுவதை ஏற்கவும் முடியாது; அரசாங்கத்திலிருந்து விலகவும் தயார்

ரணில் கூறுவதை ஏற்கவும் முடியாது; அரசாங்கத்திலிருந்து விலகவும் தயார்

அரசாங்கத்தில் இருக்கின்றோம் என்பதற்காக எமது சுயாதீனத்தை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லையெனவும், நாட்டுக்காக எவ்வேளையிலும் எந்தத் தீர்மானத்தையும் எடுக்கத் தயாராகவே இருக்கின்றோம் என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொதுத் தேர்தல் தொடர்பில் கதைப்பதால் பங்குச் சந்தை வீழ்ச்சியடைவதாக ஜனாதிபதி கூறியதை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினருடனான சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது ஊடகவியலாளர்களால் மகிந்த ராஜபக்‌ஷவிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும் அவரின் பதில்களும் வருமாறு,

கேள்வி: மொட்டுக் கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் எப்படி போகின்றது?

பதில்: அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் நாங்கள் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளோம். பலமாக முன்னால் பயணிப்போம்.

கேள்வி: நீங்கள் கேட்பது பொதுத் தேர்தலா? ஜனாதிபதித் தேர்தலா?

பதில்: எந்தத் தேர்தலுக்கும் நாங்கள் தயார். முதலில் பொதுத் தேர்தல் என்றால் அதற்குத் தயார் அல்லது ஜனாதிபதித் தேர்தல் என்றால் அதற்கும் தயார். இது எங்களுக்கு பிரச்சினையே கிடையாது.

கேள்வி: பொதுஜன பெரமுன பொதுத் தேர்தலைத் தானே கேட்கின்றது.

பதில்: இல்லை, இல்லை. எந்தத் தேர்தலுக்கும் நாங்கள் தயார். சிலர் ஜனாதிபதித் தேர்தலை விரும்புகின்றனர். சிலர் பொதுத் தேர்தலை விரும்புகின்றனர். ஆனால் நாங்கள் எதற்கும் தயார்.

கேள்வி: பொதுத் தேர்தல் தொடர்பில் கதைப்பதால் பங்குச் சந்தை வீழ்ச்சியடைவதாக ஜனாதிபதி கூறுகின்றார். அதுபற்றி?

பதில்: என்ன பைத்தியமோ.

கேள்வி: அது ஜனாதிபதி கூறுவதுதானே?

பதில்: அதனை ஏற்கப் போவதில்லை.

கேள்வி: தேசிய சொத்துக்களை விற்பதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளீரே?

பதில்: நான் மட்டுமல்ல, கட்சியில் 99 வீதமானவர்கள் இந்த நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர்.

கேள்வி: அப்படியென்றால் அரசாங்கம் முன்னெடுக்கும் இவ்வாறான வேலைத் திட்டங்களை அனுப்பதிப்பதில்லையா?

பதில்: ஆம். அனுமதிக்க மாட்டோம்.

கேள்வி: நீங்களும் அரசாங்கத்தில் இருந்துகொண்டே இவ்வாறு கூறுவது ஏன்? அரசாங்கத்தில் இருந்துகொண்டு கூறுவது தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றனவே?

பதில்: எங்களுக்கு அதற்கான உரிமை உள்ளது. அரசாங்கத்தில் இருக்கின்றோம் என்பதற்காக எமது சுயாதீனத்தை அரசாங்கத்திற்கு விட்டுக்கொடுக்கவில்லை. எமது நிலைப்பாட்டை அறிவிக்க எவ்வேளையிலும் நாங்கள் தயார்.

கேள்வி: விரும்பாதவற்றை செய்தால் இந்த அரசாங்கத்தில் இருந்து விலகத் தயாரா?

பதில்: எதற்கும் தயார். நாட்டுக்காக எந்தத் தீர்மானத்தை எடுக்கவும் தயார்.

கேள்வி: உங்களின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? உங்கள் மனதில் யார் இருக்கின்றார்?

பதில்: அதனை கூறுவோம் பொறுத்திருங்கள். மனதில் பலர் இருக்கின்றனர்.

CATEGORIES
Share This