பொது வேட்பாளர் அமெரிக்கா ஆர்வம்; சிறீதரன், சித்தார்த்தன், சாள்ஸ் எம்.பி.க்களுடன் யாழில் அமெரிக்க தூதுவர் சந்திப்பு
வட, கிழக்கு தமிழ் மக்கள் போருக்கு பின்னான 15 வருடங்களில் சகல வழிகளிலும் ஏமாற்றங்களை சந்தித்து விரக்தியடைந்துள்ள நிலையில், எங்களுடைய கொள்கைகளை நிலைநிறுத்தவே ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்கின்றோம் என அமெரிக்க தூதுவரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்காக அமெரிக்க தூதுவர் ஜீலிசங் – நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், த.சித்தார்த்தன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று இரவு நடைபெற்றது.
இந்த சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்;
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பாக நாங்கள் பேசினோம். போருக்கு பின்னான 15 வருடங்களில் சகல வழிகளிலும் நாங்கள் ஏமாற்றப்பட்டு விரக்தியடைந்துள்ளோம். ஜெனீவா தீர்மானங்களாலும் எமக்கு எந்தவொரு பயனும் இல்லை. இந்த நிலையில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கி எங்கள் கொள்கையை நிலை நிறுத்தவேண்டும் என்பதற்காக பொதுவேட்பாளர் தொடர்பாக தற்போது பேசிக் கொண்டிருக்கின்றோம். குறிப்பாக 2ம் வாக்கு தொடர்பாக பேசப்பட்டது. நாங்கள் தெளிவாக பதிலளித்துள்ளோம் என்னவென்றால் 2ம் வாக்கு தொடர்பில் எமக் கு உடன்பாடில்லை. 5 ஆயிரம் வாக்கு வந்தாலும், 50 ஆயிரம் வாக்கு வந்தாலும், 5 லட்சம் வாக்கு வந்தாலும் பரவாயில்லை. ஏண்ணிக்கை பெரிதல்ல.
வந்த வாக்குகள் எங்களின் கொள்கைக்கான வாக்குகளாக எடுத்துக் கொள்ளப்படும். வாக்குகள் குறை வாக இருந்தாலும் அடுத்தமுறையேனும் எங்களுடைய மக்களை அணி திரட்டுவதற்கான களத்தை இதன் மூலம் திறந்துவிடலாம் என நாங்கள் கருதுகிறோம். மேலும் தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளை மத அமைப்புக்களை சிவில் சமூகங்களை இதன் மூலம் ஒன்றிணைக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். ஏன்பதை நாங்கள் குறிப்பிட்டிருக்கின்றோம். மேலும் ஒரு கஞ்சி காய்ச்சி குடிப்பதற்கும் கூட வழியற்று இருக்கிறோம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளோம் என்றார்.