யுத்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தனி நாடு உறுதி; ஐ.நாவின் தீர்மானத்தை நினைத்து அஞ்சும் சரத் வீரசேகர
யுத்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தனிநாட்டுக் கோசம் வெற்றிபெற்று விடும் என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியம் திரட்டும் நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்ட அவர், ஐ.நா சபையின் உயர்ஸ்தானிகர், இந்த சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை இராணுவத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியுமா என்பது குறித்து உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடுவதாக குறிப்பிட்டுள்ளமை சாதாரண விடயமல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, விடுதலைப்புலிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க 29 ஆயிரம் இராணுவத்தினர் தமது உயிரை தியாகம் செய்துள்ளார்கள். இந்த தியாகத்துக்கு தற்போது மதிப்பளிக்கப்படுகிறதா என்பது சந்தேகத்துக்கிடமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், 30 வருட கால யுத்தத்தின் போது இலங்கைக்கு இஸ்ரேல் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. அதேவேளை, புலிகளுக்கு எதிராக அமெரிக்கா எவ்வித பிரேரணைகளையும் கொண்டு வரவில்லை என்பதோடு, இலங்கை இராணுவத்துக்கு ஆதரவாகவும் எந்த பிரேரணைகளையும் அமெரிக்கா கொண்டு வரவில்லை.
மாறாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதலை நிறுத்தி அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அரசியல் தீர்வு குறித்து ஆராயுமாறு அமெரிக்கா அழுத்தம் பிரயோகித்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வெளியக பொறிமுறை நீடித்தால் இலங்கையின் சுயாதீனத்துக்கு பாதிப்பு ஏற்படும்.
அதுமட்டுமன்றி, தமிழர்களுக்கு எதிராகவே வடக்கு கிழக்கில் யுத்தம் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படுமானால் தனிநாடு என்ற கோசம் வெற்றிபெறும் எனவும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.