நாடாளுமன்றம் கலைக்கப்படுமா?; தயாராகி வரும் இரு அவசர சட்டமூலங்கள்
அவசரமாக நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான ஆயத்தங்கள் எதுவும் இல்லை என அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும், இது தொடர்பில் அரசாங்கத் தரப்பிலிருந்து உத்தியோபூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.
இந்த வார இறுதியில் நாடாளுமன்றத்தைக் கலைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன.நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் அரசாங்கத்தில் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இது ஒரு தலைப்பாக அமையவில்லை என அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் வாரத்தின் நாடாளுமன்ற கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு அவசர சட்டமூலங்கள் எதிர்வரும் 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்தார்.
இவ்வாறான பின்னணியில், ஜனாதிபதி தேர்தலுக்கு பதிலாக பொதுத் தேர்தலை நடத்துவதே பசில் ராஜபக்சவின் நோக்கமாக இருந்து வரும் நிலையில் இவ்வாறான திடீர் திருப்பங்கள் அரசியல் அரங்கில் அரங்கேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.