9ஆவது ஜனாதிபதியுடன் கதைத்து ஏமாறுவதற்கு முன்னரே சம்பந்தன் ஐயா காலமாகிவிட்டார்

9ஆவது ஜனாதிபதியுடன் கதைத்து ஏமாறுவதற்கு முன்னரே சம்பந்தன் ஐயா காலமாகிவிட்டார்

இலங்கையின் 09வது ஜனாதிபதியுடனும் கதைத்து ஏமாறுவதற்கு முன்பாகவே பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் காலமாகிவிட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

வடகிழக்கு இணைந்த சமஸ்டி தீர்வு தரப்பட வேண்டும் என்பதில் இலங்கையின் எட்டு ஜனாதிபதிகளுடன் பேசி நம்பி ஏமாந்த தலைவராகவே நாங்கள் சம்பந்தன் ஐயாவை பார்க்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின்  பெருந்தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மறைந்த இரா.சம்பந்தனின் ஆத்ம சாந்தி வேண்டி அஞ்சலி நிகழ்வு இலங்கை தமிழ் அரசு கட்சியின் பட்டிப்பளை பிரதேச கிளையின் ஏற்பாட்டில் அம்பிளாந்துறை பகுதியில் நேற்று (02) மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன் மற்றும் ஞா.ஸ்ரீநேசன் ஆகியோருடன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் வட்டார கிளை தலைவர், செயலாளர், பொருளாளர், இளைஞர் அணியினர், உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வின்போது அஞ்சலி செலுத்தும் முகமாக தீபச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து, மலர் தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அங்கு, பாராளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றுகையில், சம்பந்தனின் அரசியல் வாழ்க்கை, அவரது செயற்பாடுகள் தொடர்பாக பேசினர். 

அத்தோடு, கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என எட்டு ஜனாதிபதிகளிடமும் அதாவது யுத்த காலத்துக்கு முன்னர் இருந்த ஐந்து ஜனாதிபதிகளிடமும் யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் இருந்த மூன்று ஜனாதிபதிகளிடமும் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்கும் விடயம் தொடர்பாக சம்பந்தன் பேசியதாகவும், எனினும், அதற்கான தீர்வினை எந்த ஜனாதிபதியும் பெற்றுக்கொடுக்காமல் சம்பந்தனை ஏமாற்றிவிட்டார்கள் எனவும் கருத்து தெரிவித்தனர்.

அத்தோடு, சம்பந்தன் அரசியலுக்கு வருவதற்கு முன் ஒரு சட்டத்தரணியாக பணியாற்றியதுடன், அந்த காலப்பகுதியில் எல்லோருக்கும் மேற்பட்ட வழக்குகளில் அவர் ஆஜராகியிருந்தார். அவர் அரசியலுக்கு வருகின்றபோது அவற்றை முடித்துவிட்டே வருவேன் எனக் கூறி, அவ்வாறு வந்து தமிழ் மக்களின் உரிமைக்காகவே தனது தொடர் போராட்டத்தினை அகிம்சை வழியில் முன்னெடுத்தார் என்றனர். 

மேலும், கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் சம்பந்தன் ஐயாவின் ஆசைப்படியே இறுதி வரை நமது உரிமைகளுக்காக போராட வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை அரியநேத்திரன் உட்பட்டோர் முன்வைத்தனர்.

குறிப்பாக, அரியநேத்திரன் பேசுகையில், இலங்கையின் 09வது ஜனாதிபதியுடனும் கதைத்து ஏமாறுவதற்கு முன்பாகவே பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் காலமாகிவிட்டதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

CATEGORIES
Share This