ரஷ்ய – உக்ரைன் போர் களத்தில் இலங்கை கூலிப்படையினர்; ஒரு வாரத்தில் அழைத்துவர முடியும்

ரஷ்ய – உக்ரைன் போர் களத்தில் இலங்கை கூலிப்படையினர்; ஒரு வாரத்தில் அழைத்துவர முடியும்

அரசாங்கம் கோரிக்கை விடுத்தால், ரஷ்யா மற்றும் உக்ரைனில் கூலிப்படையாக பணிபுரியும் இலங்கையர்களை ஒரு வாரத்திற்குள் மீட்கமுடியும் என இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

மத்தள விமான நிலைய வளாகத்தில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இன்று இலங்கைப் படையினர் பல்வேறு நாடுகளுக்கு கூலிப்படையாக அனுப்பப்படுவதால் அவர்களின் உயிர்கள் முன்கூட்டியே அழிக்கப்படுகின்றன.

இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு கடத்தல்காரர்கள் இந்த மனித கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு இலங்கை அரசும் அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும்.

ரஷ்ய மற்றும் உக்ரைன் அரசாங்கங்கள் கூலிப்படையினரை நேரடியாக பணிக்கு அமர்த்துவதில்லை. இடைத்தரகர்கள் மூலம்தான் கூலிப்படையினர் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர்.

இவ்வாறு பணியமர்த்தப்படும் கூலிப்படையினருக்கு பயிற்சி அளிக்கப்படுவதில்லை. அவர்கள் நேரடியாக போர் களத்தின் முன் வரிசைக்கு அனுப்பப்படுகின்றனர்.

முன் களத்தில் சுமார் 1500 வெளிநாட்டினர் கொண்ட கூலிப்படை இருப்பதாக உக்ரைனின் தூதர் என்னிடம் கூறினார். அவர்களில், இலங்கை இராணுவ வீரர்களும் அதிக அளவில் உள்ளனர்.

இறந்தவர்களின் உடலை கூட இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை.

ரஷ்யா அல்லது உக்ரைனின் இராணுவத்தில் சட்டப்பூர்வமாக சேர, ஒருவர் அந்த நாட்டின் குடிமகனாக இருக்க வேண்டும். இவ்வாறு ஆட்சேர்ப்பு செய்பவர்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் எந்தப் பொறுப்பும் இல்லை.

எனவே இது ஒரு மோசடி. இந்த மோசடியில் யாரும் சிக்கிக்கொள்ள வேண்டாம். நான் தூதராகப் பணிபுரிகிறேன் என்றால், இதைத் தீர்க்க எனக்கு ஒரு வாரம் ஆகும்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரை, ஏறக்குறைய 20 இலங்கை இராணுவ வீரர்கள் போரில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மிகவும் தீவிரமான நிலை. இவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவர தூதரகங்கள் நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை.

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் என்ற வகையில், அரசாங்கம் என்னிடம் ஏதேனும் கோரிக்கை முன்வைத்தால், ஒரு வாரத்திற்குள் அவர்களை நாட்டிற்கு அழைத்து வர முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This