எதிர்க்கட்சியின் கூட்டணியை பிளவுப்படுத்த ஆளுங்கட்சியுடன் ‘டீல்’: தனிப்பட்ட விடயங்கள் குறித்தும் விமர்சனம்
ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாகும் காலம் நெருங்கிவரும் சூழலில் பிரதானக் கட்சிகள் தமது கூட்டணிகளை இறுதிப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் ஏனைய கட்சிகள் தமது கூட்டணிகள் தொடர்பில் இறுதி நிலைப்பாட்டை எடுத்துவிட்டன.
ஆளுங்கட்சி மாத்திரமே இன்னமும் தமது கூட்டணி மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் அறிவிப்புகளை வெளியிடாதுள்ளது.
ஐ.தே.கவும் பொதுஜன பெரமுனவும் இணைந்து கூட்டணியை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. குறித்த கூட்டணியின் வேட்பாளராகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறங்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
என்றாலும், ஐ.தே.கவுக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இன்னமும் இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை. வேட்பாளர் யார் என்பது தொடர்பில் இறுதி தீர்மானத்தை பொதுஜன பெரமுன எடுக்கவில்லை.
நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்த வேண்டுமென்பதே பொதுஜன பெரமுனவின் எதிர்பார்ப்பாகும். ஆனால், ரணில் விக்ரமசிங்க, இதற்கு இணங்க முடியாதென திட்டவட்டமாக பசிலிடம் கூறிவிட்டார்.
இந்த நிலையில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் உருவாக்கப்படும் பரந்தப்பட்ட கூட்டணியை சீர்குலைக்க அரசாங்கத்தின் தரப்பில் வழங்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமுல்படுத்தி வருவதாக தெரிய வருகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைபவர்களுக்கு எதிராக ஊழல் – மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்துவது, தனிப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துகளை வெளியிடுவது மற்றும் அவர்கள் இணைவதை தடுக்கும் வகையில் கட்சிக்குள் குழப்பங்களை ஏற்படுத்துவதுமே இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய பணியாகும்.