ரஷ்ய – உக்ரைன் போரில் இலங்கை வீரர்கள் எட்டு பேர் பலி: விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள அரசாங்கம்
ரஷ்ய – உக்ரைன் போரில் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து கொள்வதற்காக ஆட்கடத்தற்காரர்களால் அனுப்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் 08 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் இந்த உயிரிழப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
உயிரிழந்த போர் வீரர்களில் அறுவர் ரஷ்யாவிலும், இருவர் உக்ரைனிலும் உயிரிழந்துள்ளனர். மேலும் உரியிழப்புகள் பதிவாகியுள்ளதாக என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மனித ஆட்கடத்தற்காரர்களால் இதுவரை 83 இராணுவ வீரர்கள் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அவர்களில் 60 பேர் ரஷ்யாவிற்கும், 23 பேர் உக்ரைனுக்கும் அனுப்பட்டுள்ளனர்.
ரஷ்ய-உக்ரைன் போரில் கூலிப்படையாக செயற்படும் இலங்கை இராணுவத்தின் முன்னாள் வீரர்கள் பலர் கொலை செய்யப்பட்டமையை அறிக்கையொன்றை வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சு உறுதிப்பிடுத்தியிருந்தது.
ஓய்வுப் பெற்ற இராணுவ வீரர்கள் பலர் வெளிநாட்டு முகவர்களால் ஊடாக போலி வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு உக்ரைன் – ரஷ்ய போர் முனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியிருந்தது.
அதிக சம்பளம், குடியுரிமை உள்ளிட்ட போலியான வாக்குறுதிகளின் பிரகாரம் ஆட்கடத்தல்காரர்களால் அழைத்துச் செல்லப்பட்ட இலங்கையர்கள், ரஷ்ய-உக்ரைன் போரில் முன்கள வீரர்களாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இலங்கை இராணுவத்தின் ஓய்வு பெற்ற வீரர்களை கூலிப்படையாக அனுப்பி ஆட்கடத்தலுக்கு பிரதானமாக செயற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் மேஜர் ஜெனரல் ஒருவரும் அவருக்கு ஆதரவாக செயற்பட்ட முன்னாள் சர்ஜென்ட் மேஜர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.