டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு சட்டப்பூர்வ தகுதி எதுவும் இல்லை என உச்ச நீதிமன்றம் இன்று (08) தீர்ப்பளித்துள்ளது.
சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது.
பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ள டயானா கமகே, நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான தீர்ப்பு சற்று முன்னர் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம், டயானா கமகேவின் தகுதி நீக்கம் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வழிவகுக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீதியரசர்களான காமினி அமரசேகர, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் தீர்ப்பை வழங்கியுள்ளது.
மனுதாரர் ஓஷல ஹேரத் சார்பில் சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் மற்றும் நிஷிகா பொன்சேகா மற்றும் ஷானன் திலேகரத்ன ஆகியோர் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.