நினைவேந்தல்களை இளையவர்கள் சிந்திக்கும் படியாக கடத்த வேண்டும்
முள்ளிவாய்க்கால், மாவீரர் தினம் உட்பட எமது நினைவேந்தல்களை இளையவர்கள் சிந்திக்கும்படியாக கடத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்களுடைய உரிமைப் போராட்டம் தொடர்கிறது. போராட்டம் மூலம் பல நன்மையான விடயங்களை பெற்றிருக்கின்றோம். போராட்டம் உச்ச நிலையில் இருந்தபோது முள்ளிவாய்க்காலில் துவம்சம் செய்யப்பட்டார்கள்.
அன்றைய நாட்களில் மக்களின் பிரதான உணவு கஞ்சியாகவே காணப்பட்டது. எனவே எமது இனத்திற்கு நிகழ்ந்த துயரங்களை முள்ளிவாய்க்கால் கஞ்சி மூலம் எமது இளைய சமூதாயத்திற்கு கடத்தகூடிய வாய்ப்பு உள்ளது.
முள்ளிவாய்க்கால், மாவீரர் தினம் உட்பட எமது நினைவேந்தல்களை இளையவர்கள் சிந்திக்கும்படியாக கடத்த வேண்டும். எனவே இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதியின் ஏற்பாட்டில் எதிர்வரும் 12ஆம் திகதி 9 மணிக்கு தமிழராய்ச்சி படுகொலை நினைவுத் தூபிக்கு அருகில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி தொடக்கிவைக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து ஏனைய இடங்களிலும் தமிழரசுக் கட்சியால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படும், என்றார்.