ஜனாதிபதி – நாடாளுமன்றம் – இரு தேர்தல்களையும் ஒரே தடவையில் நடத்த முடியாதா?

ஜனாதிபதி – நாடாளுமன்றம் – இரு தேர்தல்களையும் ஒரே தடவையில் நடத்த முடியாதா?

இலங்கை தீவு 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி சுதந்தரம் பெற்றது. அன்றிலிருந்து இன்று வரையில் ஒற்றையாட்சி நாடாளுமன்ற முறைமை (Unitary State) நாட்டில் அமுலாக்கப்பட்டது.

இலங்கை வாழ் மக்கள் எத்தனை தேர்தல்களுக்கு முகம் கொடுத்திருப்பார்கள் ?

இவ்வாறு முகம்கொடுக்க தேர்தல்களால் பொதுமக்கள் அடைந்த பயன் தான் என்ன என்ற கேள்வி எழுமேயானால் அதற்கான பதிலும் நம்மிடையே உண்டு. நிச்சயமாக பொதுமக்கள் எந்த ஒரு சந்தோஷத்தையும் எந்த ஒரு பயனையும் தன்னுடைய வாக்குக்கான பெறுமதியையும் பெறவில்லை.

ஜனாதிபதி முறைமை

கடந்த 1977ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதி முறைமை இன்று வரையில் நீடித்து வருகிறது.

எந்தவொரு அரசியல் தலைவரும் இந்த முறைமையை மாற்றியமைப்பதாக தெரிவித்தாலும் எவராலும் இதனை மாற்றியமைக்க முடியவில்லை.

அதற்கான காரணம் இந்த விடயத்தின் அடி முடியைத் தேடுவது சிரமம் என்பதே ஆகும் .

ஜனாதிபதி முறைமையை உருவாக்கிய நாள் தொடக்கம் ஜனாதிபதி தேர்தல்கள் உள்ளிட்ட அநேகமான பொதுத் தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன.

எனினும், இந்த தேர்தல்கள் மூலம் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிக்கோ அரசியல் கட்சிக்கோ குறித்த அரசியலமைப்பு திட்டத்தை மாற்றியமைக்க முடியவில்லை.

தேர்தல்களுக்கான ஆண்டு

இவ்வாறானதொரு பின்னணியில் 2024ஆம் ஆண்டு தேர்தல்களுக்கான ஒரு ஆண்டாக அமையும் என்பது கடந்த ஆண்டிலிருந்து பேசுபொருளாக அமைந்த ஒரு விடயம் .

எதிர்பார்த்தவாறே, இவ்வாண்டில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுத் தேர்தலின் நிலை எதுவாக இருப்பினும் ஜனாதிபதித் தேர்தல் என்பது யாப்பு ரீதியாக இவ்வருடத்தில் நிச்சயம் இடம்பெற வேண்டிய ஒன்றாகும்.

எதிர்வரும் அக்டோபர் மாதம் 5ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது என்பது அரசல் புரசலாக பேசப்பட்டு வரும் ஒரு விடயம்.

எவ்வாறாயினும், இதனை இன்னுமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் உத்தியோகபூர்வமான தேர்தல் பிரச்சாரங்கள் ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்தி இடம்பெற்று வருகின்றன. மேதின நிகழ்வு அதற்குச் சிறந்த உதாரணம்.

இரு தேர்தல்களும் ஒரே நாளில்

இந்நிலையில், இவ்வாண்டுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் இவை இரண்டையும் ஒரே நாளில் நடத்த முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக நிலவி வருகிறது.

இது தொடர்பில் புதன்கிழமை (01.05) வெளியான ‘லங்காதீப‘ பத்திரிகையில் செய்தியொன்றும் வெளியாகியிருந்தது.

இரண்டு நாட்களாக தேர்தலை நடத்தும் போது அதிகளவு பணம் செலவிடப்படும். இரு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்தி முடிப்பதன் மூலம் அதிக செலவின்றி சிரமமின்றி நடத்தி முடிக்க முடியும் என்பது அவர்களின் நிலைப்பாடு.

பொதுமக்கள் நிதியில் தேர்தல்களை நடாத்தி அதன் மூலம் பொதுமக்களுக்கு ஒரு இலாபம் கிடைக்கும் என்றால் அதனால் எந்தவொரு சிரமும் கிடையாது கருத்தும் நிலவி வருகிறது.

சாத்தியக் கூறுகள்

இந்த கருத்துக்களின் படி இரு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றனவா ?

மக்கள் ஆணையற்ற ஜனாதிபதி ஒருவரே தற்போது நாட்டை ஆட்சி செய்து வருகிறார்.

ஆக, பொதுமக்களின் வாக்குகளுடன் தெரிவாகும் ஒருவரை ஜனாதிபதியாக்க நிச்சயம் ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெற வேண்டியது அவசியம்.

மக்கள் ஆணையில்லாத தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு வெகு விரைவில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அதன்படி, இரு தேர்தல்களும் ஒரே நாளில் இடம்பெறுமா? அரசியல் யாப்பில் அதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்றாலும் கூட இது இலங்கையில் சாத்தியப்படாது என்பது அரசியல் மற்றும் நாட்டின் நிலையறிந்த பலரின் கருத்து.

ஏன் சாத்தியப்படாது?

இந்தியா போன்ற நாடுகளில் இவ்வாறு இரு வேறு தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த கூடிய இயலுமை இருந்தாலும் கூட இலங்கையில் அது முடியாது.

காரணம், நாட்டு மக்களிடையே இது தொடர்பிலான விழிப்புணர்வு இல்லை எனச் சிலர் கூறலாம். ஆனால் அரசியல் கட்சிகளும் அதன் மூத்த தலைவர்களும் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்த விரும்புவதில்லை என்பது கண்கூடு.

இந்தியா போன்ற நாடுகள் தமது மக்களை இவ்வாறான விடயங்களுக்கு பழக்கப்படுத்திக்கொண்டமை மற்றும் அங்கு காணப்படக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு முறைமை என்பன தீர்வாக அமைந்தன.

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்

எனினும் இதனை இலங்கையில் செயல்படுத்தினால் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெற்ற தேர்தலின் போது மொத்தம் 744,373 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

இலங்கை அரசியல் வரலாற்றில் தேர்தல் ஒன்றின் போது இவ்வளவு அதிகளவிலான வாக்குகள் நிராகரிக்கப்பட்ட முதல் தடைவையாக இது பார்க்கப்பட்டது.

கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது 135,452 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

இதேவேளை, 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் 517,123 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

Oruvan

வாக்குகள் நிராகரிக்கப்படுவதற்கான காரணம்

பெருமளவிலான வாக்குகள் நிராகரிக்கப்படுவதற்கான முக்கிய காரணங்களுள் பொதுமக்களின் தேர்தல் கல்வியறிவு , சின்னங்களில் குழப்பம் காரணமாக வாக்குச் சீட்டுகளில் தவறான குறியிடல் போன்றவை விளங்குகின்றன. வேறு சிலர் வேண்டுமென்றே நிராகரிக்கின்றனர்.

அதிக செலவை கவனத்தில் கொண்டு இரு தேர்தல்களை ஒரே நேரத்தில் நடாத்த திட்டமிட்டாலும் அது யாப்பு ரீதியில் சிக்கல்களை உருவாக்கவில்லையெனினும் நடைமுறை ரீதியில் சிக்கல்களை உருவாக்குகிறது.

ஆகவே, இரு தேர்தல்களை ஒரே நாளில் நடத்தினால் செலவு இரட்டிப்பாவது மட்டுமல்லாமல் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் வீதமானது அதிகரிக்கிறது.

CATEGORIES
Share This