உழைப்பாளர் தினம்… ஆடை அரசியல்…; சிவப்புச்சட்டை உணர்த்துவது என்ன?

உழைப்பாளர் தினம்… ஆடை அரசியல்…; சிவப்புச்சட்டை உணர்த்துவது என்ன?

ஆடை அதன் நிறம் முதற்கொண்டு அத்தனை விடயங்களும் ஒரு அரசியல்வாதி, அவர் சார்ந்த கட்சியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை இதுதான் அரசியல்வாதியின் பொதுப்படையான அடையாளமாக நாம் காண்கிறோம். சினிமா எமக்கு கற்றுக்கொடுத்த பாடமும் அதுதான்.

இடதுசாரி அரசியல் கொள்கையுடன் பயணிக்கும் சில அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகள் அடையாள அரசியலை அரவணைக்கும் அதேவேளை வழமைகளை புறக்கணிப்பது உண்டு.

அந்த வகையில், உழைப்பு, ஆபத்து, எச்சரிக்கை, கோபம், ஆதிக்கம் இப்படி பல வின்பங்கள் கொடுக்கப்படும் சிவப்பு நிறத்தை அவர்களின் அடையாளமாக கொண்டு செயற்படுகின்றனர்.

இந்தப் பின்னணியில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் தேசிய மக்கள் சக்தியினர் வழமையாக சிவப்பு ஆடையை அடையாளமாக கொண்டுள்ள நிலையில், இது தவிர்ந்த ஏனைய பிரதான கட்சிகளின் ஒரு சிலர் மாத்திரம் மே தின மேடையில் சிவப்பு சட்டையில் அமர்ந்திருந்தமை அனைவரினது கவனத்தை ஈர்த்திருந்தது.

இதன்படி, தான் எந்த கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் அந்தக் கட்சியின் நிறத்திலேயே ஆடையை தெரிவு செய்யும் வடிவேல் சுரேஷ் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின மேடையில் சிவப்பு சட்டையில் அமர்ந்திருந்தது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதேபோன்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மே தின மேடையில் நளின் பண்டார, தலவாக்கலை மேடையில் பழனி திகாம்பரம் ஆகியோர் சிவப்பு சட்டையில் காணப்பட்டனர்.

மேலும், கொட்டகலையில் இடம்பெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தின கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ராமேஷ்வரன், கணபதி கனகராஜ் ஆகியோர் சிவப்பு சட்டையில் நின்றனர்.

இவ்வாறே முன்னாள் ஜனாதிபதி தலைமையில் கம்பஹாவில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மேதின கூட்டத்திலும் சிவப்பு சட்டையுடன் மேடையில் அமர்ந்திருப்பதை அவதானிக்க முடிந்தது.

இந்த விடயம் அரசியல் அவதானிகள் பலரால் அவதானிக்கப்பட்ட நிலையில், இதற்கு வலுசேர்ப்பது போன்று இன்றைய மௌபிம நாளிதழ் ‘சிவப்பு கொடியின் நிழலில் மே தின கொண்டாட்டம்’ என தலைப்பிட்டு இதுசார்ந்து எந்தவொரு கருத்தையும் வெளிப்படுத்தாது புகைப்படங்களை மாத்திரம் பிரசுரித்துள்ளது.

Oruvan

ஆக, சிவப்பு சட்டை மூலம் இவர்கள் உணர்த்த முனைவது என்ன என கேள்வி எழுந்துள்ள நிலையில், உழைப்பாளர்களின் நிறம் சிவப்பு என்பதால் அத்தகைய ஆடையை அவர்கள் அணிந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மறுபுறத்தில் எதிர்கால அரசியல் பயணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதற்கான முன்கூட்டிய சமிக்ஞையை இந்த சிவப்பு சட்டை மறைமுகமாக வெளிப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், உழைக்காமல் தாம் கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்க முயற்சிக்கவில்லை, உழைப்பாளர்களை போல் வியர்வை சிந்தி உழைத்து தேர்தலில் வெற்றி பெற்றே ஆட்சியை பிடிக்க விரும்புகிறோம் சொல்லாமல் சொல்வது போல் இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

CATEGORIES
Share This