ஜனாதிபதித் தேர்தல் எப்போது?: இரண்டு திகதிகளை பரிசீலிக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு
இலங்கையில் மே தின நிகழ்வுகளுடன் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்கிவிட்டன.
வழமையான மே தினம் போன்று அல்ல இம்முறை மே தின நிகழ்வுகள் இருந்தன. அனைத்துக் கட்சிகளினதும் மேடைகளில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பிலான கருத்துகளே பகிரப்பட்டன.
ஜே.வி.பியின் அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி கொழும்பு, மாத்தறை, அநுராதபுரம், யாழ்ப்பாணம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை மையப்படுத்தி மே தின நிகழ்வுகளை நடத்தியிருந்தது.
மே தினத்துக்கு பின்னரான சில கருத்துக் கணிப்புகளின் பிரகாரம் தேசிய மக்கள் சக்தியின் மே தின நிகழ்வுகளிலேயே அதிகளவான மக்கள் கலந்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு மே தின நிகழ்வில் உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க,
‘‘மூன்று வீதமாக இருந்த தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வீதம் 51 வீதமாக மாறியமை அதிசயம் என சிலர் கூறுகின்றனர். ஆனால் அது அதிசயமோ, மாயமோ அல்ல. மக்கள் யதார்த்தத்தை உணர்ந்துள்ளனர்.
இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் வலுவான மக்கள் இயக்கம் தேசிய மக்கள் சக்திதான். அடுத்த ஆண்டு மே தினப் பேரணி தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழே நடத்தப்படும். சட்டம் ஒழுங்குடன் கூடிய சமுதாயத்தை கட்டியெழுப்புவது அனைவரின் பொறுப்பாகும்.‘‘ என்றார்.
கொழும்பு மாளிகாவத்தையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2022ஆம் ஆண்டு இருந்த நிலைக்கு மீண்டும் நாட்டை கொண்டுசெல்ல வேண்டுமா அல்லது முன்னோக்கி செல்ல வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டினா்ர.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன பெரமுனவும் கொழும்பை மையமாக கொண்டே தமது மே தின நிகழ்வுகளை நடத்தின. இந்த அனைத்துக் கூட்டங்களிலும் ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் தேர்தல் குறித்தே பேச்சாளர்களும் கருத்துகளை வெளியிட்டனர்.
இதற்கு ஒரு படி மேல் சென்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள விஜேதாச ராஜபக்சவை மேடையேற்றி அவரது கொள்கைகளை அறிவிக்கவும் வழிவகை செய்திருந்தது.
இவ்வாறு அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகிவரும் பின்புலத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு பரிசீலித்து வருகிறது.
செப்டெம்பர் 28 அல்லது நவம்பர் 05 ஆகிய இரண்டு திகதிகள் தற்போது பரிசீலனை மட்டத்தில் உள்ளன. இந்த இரண்டு திகதிகளில் தேர்தலை நடத்த வேண்டுமென்றால் எதிர்வரும் ஜுலை மாத இறுதிக்குள் முதல்கட்ட அறிவிப்புகளை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட வேண்டும்.
தேர்தலுக்கான தயார்படுத்தலின் ஒருகட்டம்தான் அவசர அவசரமாக ஆளுநர் பதவிகளில் ஜனாதிபதி மாற்றங்களை மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது.