தோட்டத் தொழிலாளி ஒருவரின் நாளாந்த சம்பளம் 1700 ரூபா; கொட்டகலையில் ஜனாதிபதி
தோட்டத் தொழிலாளி ஒருவரின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இன்று (01) முற்பகல் கொட்டகலை பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.
அத்துடன் நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்தபோது பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய பங்காற்றியிருந்தனர் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும். தொடர் குடியிருப்புகளை கிராமங்களாக மாற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்த ஜனாதிபதி, எனது ஆட்சியின் கீழ் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, கொவிட் காலத்திலும், பொருளாதார நெருக்கடியிலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களே அதிக துயரத்தை அனுபவித்தனர். அவர்கள் எவ்வாறு வாழ்ந்தனர் என்று தெரியவில்லை. கடும் துயரத்தை அனுபவித்த போதிலும், தேயிலை உற்பத்தி ஊடாக எமக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தந்த பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஜனாதிபதி என்ற ரீதியில் நன்றி கூறுகின்றேன் என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, உங்களின் உழைப்பாலும், அர்ப்பணிப்பினாலுமே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடிந்தது. அதனால் இன்று எமது பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது. யாரும் மீண்டும் 2022ஆம் ஆண்டுக்கு செல்ல விரும்பமாட்டார்கள். எம்மால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை இடைநிறுத்தி, மீண்டும் அந்த நிலைமைக்கு செல்வதற்கு நான் யாருக்கும் இடமளிக்கப் போவதுமில்லை என்றார்.
ரூபாவின் பெருமதி அதிகரித்துள்ளது. டொலரின் பெறுமதி 290 ரூபா வரை செல்லும். இதன் பயன் மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காகவே அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் 10000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ளும் பயனாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்திருக்கின்றோம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்நிலையிலேயே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் நேற்று நள்ளிரவு 1700 நாளாந்த சம்பளம் வழங்கப்பட வேண்டும் என அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஏனைய பிரச்சினைகளையும் நாம் மறக்கவில்லை. நான் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இது தொடர்பில் கதைத்துள்ளேன். அதற்கமைய லயன் அறைகளை சட்ட ரீதியாக கிராமங்களாக மாற்றுவது குறித்து அவருடன் கலந்தாலோசித்துள்ளேன். நேற்று அமைச்சர் ஜீவன் தொண்டமானுடனும் இது தொடர்பில் பேசினேன். கல்வியையும் முன்னேற்ற வேண்டியுள்ளது. விஞ்ஞானம் உள்ளிட்ட பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. எனவே விரைவில் ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த நடவடிக்கை எடுப்பார் என்றார்.
அரசாங்கம் என்ற ரீதியில் நாம் பெருந்தோட்ட மக்களை மறக்கவில்லை. உங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் எவற்றையும் நான் மறக்கவில்லை. அவற்றை மறக்க முற்பட்டால் அமைச்சர் ஜீவன் தொண்டமான் என்னுடன் முரண்படுவார். எனது ஆட்சியின் கீழ் பெருந்தோட்ட தொழிலாளர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என்று உறுதியளித்தார் ஜனாதிபதி.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளையும் உரிமைகளையும் வென்றெடுக்க ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 84ஆவது மே தின கூட்டம் இன்று புதன்கிழமை (1) காலை பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் அட்டன், கொட்டகலை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் விசேட உரையாற்றியருந்தமை குறிப்பிடத்தக்கது.