நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற மே தின கூட்டங்கள்
சர்வதேச தொழிலாளர்கள் தினம் இன்று (மே 01) உலகளாவிய ரீதியில் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், நாட்டில் பல இடங்களில் இன்றைய தினம் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய தரப்பினரின் ஏற்பாட்டில் மே தின கூட்டங்களும் ஊர்வலங்களும் இடம்பெற்று வருகின்றன.
வவுனியா
‘உழைக்கும் மக்கள் ஒன்றிணைவோம்; நாட்டின் வளங்களை பாதுகாப்போம்’ எனும் தொனிப்பொருளில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மே தின ஊர்வலமும் பொதுக்கூட்டமும் இன்று (01) காலை வவுனியாவில் இடம்பெற்றது.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்துக்கு முன்பாக ஆரம்பமான இந்த ஊர்வலம் பஜார் வீதி ஊடாக வவுனியா நகர மண்டபத்தை அடைந்தது. அதன் பின்னர் அங்கு பிரதான மே தினக் கூட்டம் இடம்பெற்றது.
இம்முறை மே தினப் பேரணியில் ‘உணவுப் பொருட்கள் எரிபொருட்களின் விலைகளைக் குறை’, ‘IMF ஆலோசனைகள், நிபந்தனைகளால் நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை நாசமாக்காதே’, ‘வற் (VAT) வரி, மின்சாரம் உள்ளிட்ட கட்டணங்களின் அதிகரிப்பை உடன்குறை’, ‘அந்நியக் கம்பனிகளுக்கும், பெரு முதலாளிகளுக்கும் வழங்கும் வரிச்சலுகையை உடன் நிறுத்து’, ‘தேசிய இனங்கள் மீதான பேரினவாத ஒடுக்குமுறைகளை உடன் நிறுத்து’, ‘தமிழ், முஸ்லிம், மலையகத் தேசிய இனங்களின் சுயாட்சி உரிமைகளை வழங்கு’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மே தின ஊர்வலமும் பொதுக்கூட்டமும் இடம்பெற்றது.
இப்பேரணியில் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்ததுடன் அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பியிருந்தனர்.
மானிப்பாய்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வு இன்றைய தினம் (01) மானிப்பாய் பிரதேச சபையின் பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
“அரசின் அடக்குமுறைகளை உடைத்தெறிவோம்” எனும் தொனிப்பொருளில் இந்த தொழிலாளர் தின நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வு காலை 9.45 மணியளவில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து தலைமை உரை, விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன.
மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான செல்வி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான சபா குகதாஸ், திரு.கஜதீபன், ரெலோவின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினர்கள், கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.