ஒரு கோடி ரூபாய் இலஞ்சம் பெற்ற 4 பேர் கைது

ஒரு கோடி ரூபாய் இலஞ்சம் பெற்ற 4 பேர் கைது

கொள்ளுபிட்டி பகுதியில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து ஒரு கோடி ரூபாய் இலஞ்சமாக பெற்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் கொள்ளுப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள வீடொன்று சோதனையிடப்பட்டு முறைப்பாட்டாளரிடம் இருந்த 12,000,000 ரூபா மற்றும் 3,500 டொலர்கள் சந்தேகநபர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

முறைப்பாட்டாளருக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்து இவ்வாறு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் வந்து அந்த வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த இந்தியரின் கடவுச் சீட்டையும் எடுத்துச் சென்றனர்.

அதன்பிறகு, முறைப்பாட்டாளரை தொலைபேசியில் அழைத்து, அவரிடம் விசாரணைக்கு உதவவும், எடுத்துச் சென்ற கடவுச்சீட்டை திருப்பித் தருவதற்கும் 4 கோடி ரூபாவினை இலஞ்சமாக கோரியுள்ளனர்.

பின்னர் அந்த தொகை மூன்றரை கோடியாக குறைக்கப்பட்டு முதல் பாகமாக ஒரு கோடி ரூபாய் இலஞ்சம் கோரப்பட்டுள்ளது.

இதன்போது செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மூன்று சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (30) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

CATEGORIES
Share This