EPAPER
இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பான ‘மலையகத் தமிழர்’ என்ற அடையாளம் வேண்டும்

இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பான ‘மலையகத் தமிழர்’ என்ற அடையாளம் வேண்டும்

”1000 ரூபா சம்பளத்தை அதிகரியுங்கள்” இது வழமையாகவே மலையகத்திலிருந்து ஒலிக்கும் குரல்.

இலங்கை ஆரம்பத்திலிருந்ததைவிட பன்மடங்காக அபிவிருத்தியடைந்து வந்தாலும் “எங்கள் வாழ்வில் முன்னேற்றம் எதுவும் இல்லை“ இது மலையக மக்களின் உளக்குமுறல்.

தற்போது இலங்கையில் மலையகத் தமிழர்கள் என அடையாளப்படுத்தப்படுபவர்கள் சுமார் 1822ஆம் ஆண்டு மற்றும் அதனை அண்மித்த காலப்பகுதிகளில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் என்பது வரலாறு.

இவ்வாறு அழைத்துவரப்பட்ட மலையக மக்கள் 1822ஆம் ஆண்டுமுதல் பெருந்தோட்டப்பகுதிகளில் அமைக்கப்பட்ட லயன் குடியிருப்புகளிலேயே இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

இலங்கையின் முன்னேற்றத்துக்கு பாரிய உறுதுணையாக காணப்படும் தேயிலை ஏற்றுமதிக்கு முதுகெலும்பாக இருக்கும் மலையகத் தமிழர்கள் காலம் காலமாக தமக்கான அடையாளம் வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மலையகத் தமிழர்கள் என்பதை தாண்டி இவர்களை இந்திய வம்சாவழியினர் என தாமே அடையாளப்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு குடியேறியவர்கள் இந்தியாவிலிருந்து இந்நாட்டுக்கு வருகை தந்ததாக வரலாறுகள் கூறினாலும் 200 வருடங்களுக்கு பின்னரும் இந்தியத் தமிழர்கள் என்ற அடையாளத்தைவிட இலங்கையுடன் தொடர்புடைய ஒரு அடையாளம் வேண்டும் என்பதே கல்வியறிவுடைய மலையக தமிழர்களின் கருத்தாக உள்ளது.

இவ்வாறனதொரு பின்புலத்தில், இந்தியர் என்ற அடைமொழியுடனான அடையாளத்தைவிட மலையகத் தமிழர் என்ற இலங்கையுடன் பொருந்திப் போகக் கூடிய ஒரு அடையாளத்துடன் நாங்கள் இலங்கையராக முன்வருவது அவசியம் என சட்டத்தரணியும் சமூக ஆர்வலருமான கௌதமன் பாலசந்திரன் தெரிவித்தார்.

“பண்பாட்டு ரீதியில் மற்றும் உணர்வு ரீதியில் ‘மலையகம்‘ என்பது இத்தனை வருடங்களாக இணைந்து காணப்படுகிறது. அந்த ஒரு உணர்வினை உத்தியோகபூர்வமாக எமக்கு வழங்க வேண்டும்.

எதிர்காலத்தில் வரக்கூடிய அரசியல் சீர்த்திருத்தங்கள், தேர்தல் சீர்த்திருத்தங்கள் போன்றவற்றுக்கு இலங்கையின் ஒரு பிரதான இனக்குழு என கூறுவதற்கு இந்த அடையாளம் எமக்கு தேவை.

இந்திய தமிழர்கள் என்ற ஒரு அடைமொழி வேண்டும் என ஒரு தரப்பினர் கூறி வந்தாலும் மலையகத் தமிழர் என்ற அடையாளத்தின் தேவை முக்கியமாக பார்க்கப்படுகிறது.

ஜே.வி.பி போன்ற கட்சிகளால் பார்க்கப்பட்ட பார்வைகள் நீங்கி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பியவர்கள் என்ற பெயரும் காணப்பட்டு வருகின்றது.

தற்போதைய ஊடகங்கள் பல எம்மை மலையகத் தமிழர்கள் என்றே அடையாளப்படுத்தி வருகின்றனர். இதனை உத்தியோகப்பூர்வபடுத்துமாறே கோரிக்கை விடுக்கின்றோம்.

பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக இருந்துவரும் ‘மலையகத் தமிழர்’ என்ற இன அடையாளத்தை உத்தியோகபூர்மான முறையில் எதிர்வரும் மாதங்களில் நடாத்தப்படவிருக்கும் குடிசன மதிப்பீட்டில் உள்ளடக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது“ எனவும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This