தமிழரசுக் கட்சியே வியாழேந்திரன்- பிள்ளையானுக்கு அரசியல் முகவரி வழங்கியது
இலங்கை தமிழரசுக்கட்சி ஏழு தசாப்தமாக தமிழ் மக்களை ஏமாற்றிவருவதாகவும், எதுவும் செய்யவில்லையெனவும் சிலர் தெரிவித்து வருகின்றனர்.இவ்வாறு கூறுகின்றவர்கள் அனைவரும் ஏதோவொரு வகையில் இலங்கை தமிழரசுக்கட்சி ஊடாக அரசியலுக்குள் வந்தவர்கள்தான் என்று தெரிவித்துள்ளார் இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன்.
தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் இன்று (26) இடம்பெற்ற அமரர் தந்தை செல்வாவின் (தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர்) 47வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிழக்கினை மீட்கப்போகின்றோம் என்று கூறும் பேரினவாத கட்சியான பிள்ளையானாக இருக்கலாம், வியாழேந்திரனாக இருக்கலாம் அல்லது தமிழரசுக்கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாகயிருக்கலாம் இலங்கை தமிழரசுக்கட்சி என்ற நாமம் இல்லாவிட்டால் அவர்கள் இன்று அரசியல் முகவரியற்றவர்களாக இருந்திருப்பார்கள்.
விடுதலைப் போராட்டத்திலே இணைந்து கொண்டவர்கள் தான் இன்று அந்த விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிக்கும் விதமாக கருத்துக்களை கூறிக் கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற சிவனேசத்துரை சந்திரகாந்தன் அந்த கட்சியினுடைய பெயரை பிரதி செய்து கொண்டு அரசியல் செய்கின்றார்.
இப்போது நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று கூறுவோமாக இருந்தால் அதனை தடை செய்யப்பட்ட இயக்கம் என கூறுகின்றார்கள். தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எவ்வாறு இலங்கையிலே பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளாக இருக்கின்றது என்கின்ற உதாரணத்தை கூற விரும்புகின்றேன்.
அரசாங்கத்துடன் காட்டி கொடுத்து அல்லது அரசாங்கத்திற்கு சோரம் போய், அரசாங்கத்துக்கு சார்பாக எந்த பெயரும் வைக்கலாம். ஆனால் அரசாங்கத்திற்கு எதிராக உண்மையான உரிமைக்காக நாங்கள் போராடுகின்ற போது அந்த பெயரை பாவிக்க முடியாது இதுவே இன்று உள்ள யதார்த்தம்.
வியாழேந்திரன் கூறுகின்றார் 7 தசாப்தங்களாக இலங்கை தமிழரசு கட்சி மக்களை ஏமாற்றி விட்டது என கூறுகின்றார். அவர் ஒன்றினை விளங்கிக் கொள்ள வேண்டும் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக முகவரி எடுத்ததன் காரணமாகத்தான் இன்று அவருக்கு இந்த பதவி கிடைத்திருக்கின்றது. ஆகவே அவர் நன்றி கூற வேண்டியது தந்தை செல்வா அவர்களுக்கும் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும்- என்றார்.