வாகரையில் இரு பிரிவினராக பிரிந்து கிடக்கும் பொதுமக்கள்

வாகரையில் இரு பிரிவினராக பிரிந்து கிடக்கும் பொதுமக்கள்

மட்டக்களப்பில் இரு வெவ்வேறு இடங்களில் நேற்று கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன.
அவற்றில் ஒன்று வாகரைப் பிரதேசத்தில் அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ள திட்டமிடப்படும் இறால் வளர்ப்பு திட்டம் மற்றும் இல்மனைட் தொழிற்சாலை அமைவதை முற்றாக தடை செய்யக்கோரிய கவனயீர்ப்பு போராட்டம் மட்டு காந்திப் பூங்காவிலும், மற்றையது வாகரை பொருளாதார வளர்ச்சியை தடுக்கும் சக்திகளுக்கெதிரான மாபெரும் கண்டணப் பேரணி மட்டு கோட்டைப் பூங்காப் பகுதியிலும் நடைபெற்றது.

வாகரை பொதுமக்களால் வாகரை இறால் வளர்ப்பு திட்டத்ததை மேற்கொள்ளாதே,இல்மனைட் அகழ்வை நிறுத்து என்பன போன்ற வாசகங்களை எழுதிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினார்கள்.அத்துடன் கிழக்கு மாகாண ஆளுநருக்கெதிராக கோஷங்களை எழுப்பியவாறும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேசமயம் இதேபோன்று மற்றைய தரப்பினர் வாகரை பொருளாதார வளர்ச்சியை தடுக்கும் சக்திகளுக்கெதிரான மாபெரும் கண்டணப் பேரணி என்ற தொனிப் பொருளிலான கண்டணப் பேரணியினை மேற்கொண்டிருந்தனர்.

பேரணியில் கலந்து கொண்டோர் பின்வரும் வாசங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியிருந்தனர்.
‘எமது வளம் எமது உரிமை,’ ‘அதிகார வர்க்கமே எம்மைச் சுரண்டாதே.’ ‘இல்மனைட் மணல் அகழ்வு எமது தொழில் உரிமை’ இதனைத் தடுத்து எம்மை வறியவராக்காதீர்கள்.என்பன போன்ற வாசகங்களை தாங்கியிருந்தனர்.

பின்னர் குறித்த இல்மனைட் கம்பனியில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பு பெற்று தொழில் புரிந்து வருகின்றனர்.இதனை தடுப்பதனால் தங்களது பிரதேச அபிவிருத்தியும் தங்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

இதன்போது அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளிக்கச் சென்றபோது இருசாராருக்குமிடையில் வாக்குவாதமும் ஏற்பட்டு அரசாங்க அதிபர் அலுவலக வளாகத்தில் சற்று நேரம் அமைதியின்மை காணப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு பொலிசார் வருகை தந்து கலவரம் இடம்பெறாத வகையில் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.இறுதியில் இரு சாராரும் அரசாங்க அதிபரிடம் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளிக்காமல் திரும்பி சென்றனர்.

கடந்த 22.04.2024 திங்கள் கிழமையன்று வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக வாகரை பிரதேச மக்கள் என்ற ஒரு அணியினர் இறால் வளர்ப்பு திட்டம் மற்றும் இல்மனைட் தொழிற்சாலை அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.அதற்கு பதிலாக எதிர்ப்பு தெரிவித்து இல்மனைட் தொழிற்சாலைக்கான ஆதரவு அணியினர் தங்கள் தரப்பு நியாயத்தை வலியுறுத்தி கவனயீர்ப்பு கண்டணப் பேரணி போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை (25) தங்களது கருத்தினை தெரிவிப்பதற்காக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு வருகை தர காத்திருந்தவர்கள் பெரும்பாலானோர் எதிர்ப்பு அணியினரால் தாக்கப்பட்டு கலைக்கப்பட்டனர்.பின்னர் இரு சாராருக்கும் இடையில் வாக்குவாதங்களும் கைகலப்புகளும் இடம்பெற்றிருந்தன.

இது மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அலுவலகம் வரை நீடிந்திருந்தது.பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று கலவரம் இடம்பெறாத வகையில் நிலமைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர். இவ்வாறான நிலையில் தங்களது எதிர்ப்பினையும் மீறி ஆதரவு அணியினர் பல்வேறு சிரமங்களையும் மீறி மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பணிமனையினை சென்றடைந்தனர்.

CATEGORIES
Share This