காருக்குள் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் பலி!
இந்தியாவின் குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 குழந்தைகள் காருக்குள் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ரந்தியா கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்துள்ளது.
பலியானவர்கள் மத்திய பிரதேசத்தில் உள்ள தார் பகுதியை சேர்ந்த விவசாயத் தொழிலாளி தம்பதியின் குழந்தைகள் என்று துணைக் காவல் கண்காணிப்பாளர் சிராக் தேசாய் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “நேற்று முன்தினம் காலை 7.30 மணியளவில் ஒரு பண்ணைக்கு வேலைக்கு சென்ற பெற்றோர், தங்களது 7 குழந்தைகளை அங்கே விளையாடுமாறு விட்டுவிட்டு சென்றுள்ளனர். 7 குழந்தைகளில் 4 பேர் பண்ணை வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த உரிமையாளரின் காரில் நுழைந்துள்ளனர். எதிர்பாராத விதமாக காரின் கதவு மூடியது. இதில் காரில் சிக்கிக்கொண்ட 4 குழந்தைகளுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு காரிலேயே உயிரிழந்தனர்.
இதில் உயிரிழந்த குழந்தைகள் 2 முதல் 7 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். குழந்தைகளின் பெற்றோர் மற்றும் கார் உரிமையாளர் மாலை வேலை முடிந்து திரும்பி வந்தபோது, அவர்கள் சடலங்களை காரில் கண்டனர்” என்றார்.
இதையடுத்து அவர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். அம்ரேலி பொலிஸ் நிலையத்தில் தற்செயலான மரணம் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.