உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; அவுஸ்திரேலிய கத்தோலிக்கர்களின் கோரிக்கை
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டு இன்னும் நீதி கோரி காத்திருப்போருக்காக பிரார்த்தனை செய்யுமாறு அவுஸ்திரேலிய கத்தோலிக்கர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அவுஸ்திரேலிய கத்தோலிக்க செய்திச்சேவை ஒன்று வெளியிட்டுள்ள தகவலிலேயே இது தொடர்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் குறித்த செய்தியில், ” உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் 2019 ஏப்ரல் 21 மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, இலங்கையில் மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று விருந்தகங்களை குறிவைத்து ஒத்திசைக்கப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்த சம்பவங்களில் 273இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களில் 45 குழந்தைகள் மற்றும் அவுஸ்திரேலியர்கள் உட்பட 40 வெளிநாட்டவர்கள் ஆவர். சுமார் 500 பேர் படுகாயமடைந்தனர்.
இந்தநிலையில், அவுஸ்திரேலியர்கள் பலரும் இணைந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த வருடாந்த நினைவுச் சேவையை நடத்தி வருகின்றனர்.
எனினும், இலங்கை அரசின் வாக்குறுதிகள், உறுதிமொழிகள்,விசாரணைகள் எவையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி அல்லது பதில்களை இன்னும் பெற்று தரவில்லை.” என குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, அவுஸ்திரேலியாவில் உள்ள புலம்பெயர்ந்த இலங்கையர்களால் அமைக்கப்பட்டு வரும் குழுவானது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்கான அவுஸ்திரேலியா – இலங்கை மன்றத்தை ஆரம்பித்து சேவைகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.