பொது சின்னத்தில் போட்டி: ரணிலுடன் இணக்கப்பாடு – தொடர்கிறது பேச்சுகள்

பொது சின்னத்தில் போட்டி: ரணிலுடன் இணக்கப்பாடு – தொடர்கிறது பேச்சுகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு பல கட்சிகளுடன் இணைந்து பரந்த கூட்டணியில் போட்டியிடுவதற்கான இணக்கப்பாட்டுக்குள் வந்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

முதற்கட்டமாக இரு பிரதான கட்சிகளுக்கும் இடையில் கொள்கையளவிலான உடன்பாடுகளை எட்டுவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும், இரு கட்சிகளுக்கும் தேசிய கொள்கைகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படாமையினால், விரைவில் உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், பேச்சுவார்த்தை முடிந்த பின்னரே இறுதி முடிவு எட்டப்படும் என்று இரு கட்சிகளின் வட்டாரங்களும் தெரிவித்தன.

”இணக்கப்பாடு எட்டப்பட்டால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக பொது சின்னத்தில் போட்டியிடுவோம்.

இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார்.” என அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பல தடவைகள் சந்தித்தும் சாதகமான தீர்மானம் எதுவும் எடுக்க முடியாமல் போனதால், தேர்தல் தொடர்பில் முடிவெடுக்க ஜனாதிபதிக்கு அனுமதியை வழங்கியுள்ளார். .

எவ்வாறாயினும், எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்கனவே வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந்த பின்புலத்திலேயே இரு கட்சிகளுக்கும் இடையிலான ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

CATEGORIES
Share This