மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவு முதல் அமல்!
தமிழக கடல் பகுதியில் ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் அறிவிக்கப்படும். இந்த காலகட்டத்தில் கடற்தொழிலாளர்கள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்லமாட்டார்கள். விசை படகுகள், மீன்வலைகள் மற்றும் மீன் பிடி உபகரணங் களை சீரமைக்கும் பணியில மீனவர்கள் ஈடுபடுவார்கள்.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது. இது வருகிற ஜூன் மாதம் 14ஆம் திகதி வரை 61 நாட்கள் அமலில் இருக்கிறது.
மீன்பிடி தடைகாலம் தொடங்கும் நிலையில் இன்று விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேட்டில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற அனைத்து விசைப்படகுகளும் கரைக்கு திரும்பின.
இதனால் கடந்த வாரத்தை விட வஞ்சிரம், வவ்வால் போன்ற மீன்கள் வரத்து அதிகமாக இருந்தது. ஆனால் இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதன் காரணமாக மீன்விலை சற்று குறைவாகவே விற்கப்பட்டது.
கடந்த வாரத்தில் ரூ.1300 வரை விற்கப்பட்ட வஞ்சிரம் இன்று ரூ.800-க்கு விற்கப்பட்டது. கடமா எப்போதும் விற்கப்படும் விலையை விட ரூ.200 வரை குறைத்து விற்கப்பட்டும் அதனை வாங்க ஆட்கள் இல்லை.
இதனால் வார இறுதி நாட்களில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் காசிமேடு மார்க்கெட் இன்று வழக்கமான உற்சாகம் இன்றி காணப்பட்டது. இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் தொடங்குவதால் இன்னும் 2 மாதத்திற்கு இதே நிலைதான் இருக்கும் என்று கடற்தொழிலாளர்கள் தெரிவித்தனர்.