திருமாவளவன் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள நடேசன் நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி தேர்தல் பிரசாரம் மற்றும் பணிகளை கவனித்து வருகிறார்.
இந்நிலையில், திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
வருமான வரித்துறையினர் சுமார் 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை 6.30 மணியளவில் முதல் சுமார் ஒரு மணி நேரம் தீடீர் சோதனை நடத்தினர்.
பின்னர் வீட்டின் உரிமையாளருக்கு, கடலூர் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு இன்று (புதன்கிழமை) மதியம் 3 மணிக்கு வந்து ஆஜராக வேண்டும் என சம்மன் அளித்து விட்டு சென்றனர்.
வருமான வரித்துறையினரின் திடீர் சோதனையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தொல்.திருமாவளவன் கூறுகையில்,” எந்த முகாந்திரமும் இல்லாமல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது ஒரு மறைமுகமான அல்லது வெளிப்படையான அச்சுறுத்தல்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.