இஸ்லாமிய மக்களின் புனித நோன்பு பெருநாள் இன்று!
இறை அருளையும் பாவ விமோசனத்தையும் அடைய ரமழான் எனும் விஷேட மகத்துவமான மாதத்தை வழியனுப்பி வைத்து கவலையில் ஆழ்ந்த இறை விசுவாசிகளுக்கு ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இறைவன் வழங்கிய மாண்பு மிக்க தினமே புனித நோன்புப் பெருநாள் தினமாகும்.
புனித ரமழான் மாதத்தில் பகல் முழுவதும் நோன்பு நோற்று, இரவெல்லாம் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்த முஸ்லிம்கள் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டவுடன் ஈதுல் பித்ர் எனும் ஈகைத் திருநாளை குதூகலமாக கொண்டாடுகின்றனர். ரமழானில் நன்மைகளைக் கொள்ளையிட்ட உள்ளங்கள் ஷவ்வால் மாத தலைப் பிறையுடன் ரமழானுக்கு விடை கொடுத்து விட்டு நோன்புப் பெருநாள் குதூகலத்தில் திளைக்கின்றன.
பெருநாள் தினம் என்பது சிறியோர், பெரியோர், ஏழை, பணக்காரன், முதியவர் என்ற எவ்வித பாகுபாடும் இன்றி மகிழ்ச்சியுடன் கழிக்கக் கூடிய தினமாகும். இப்பெருநாள் தினத்தில் நோன்பு நோற்பதை ஹராமாக்கியுள்ள இஸ்லாம் அல்லாஹ்வின் உவப்புக்குரிய வழிகளில் பெருநாளைக் கொண்டாட வழிகாட்டியுள்ளது.
பெருநாள் தினம் அல்லாஹ்வை ஞாபகமூட்டக் கூடிய, அவனைப் புகழக் கூடிய தினமாக இருக்க வேண்டுமே தவிர நற்செயல்களுக்கு மூட்டை கட்டும் தினமாக அமையலாகாது. ஈதுல் பித்ர் பெருநாளில் அதிகமானளவு நன்மைகளை செய்ய நாம் முன்வர வேண்டும். நாம் மட்டும் பெருநாளைக் கொண்டாட அயல் வீட்டார் பெருநாளைக் கொண்டாட வசதியற்றவனாக இருப்பாரேயானால் நாம் கொண்டாடும் பெருநாளில் என்ன தாற்பரியம் உண்டு என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
நோன்புப் பெருநாளுக்கு ஒவ்வொரு முஸ்லிமும் தயாராகும் போது பித்ரா (தர்மம்) கொடுப்பதைக் கொண்டே தயாராக வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். நோன்புப் பெருநாள் தர்மம் நோன்பின் போது ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாகவும் ஏழை, எளியவர்கள் பெருநாள் தினத்தில் பசி, பட்டினியோடு இருக்கக் கூடாது என்ற நோக்கங்களின் அடிப்படையிலும் கடமையாக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் பெருநாள் தினம் தனித்துவமானதாகவும் முன்மாதிரியானதாகவும் அமைய வேண்டுமென்று இஸ்லாம் எதிர்பார்க்கின்றது. முஸ்லிம்கள் இந்த நாட்டில் தனியாக வாழ்பவர்கள் அல்லர். நாம் பெரும்பான்மை சமூகங்களுடன் இரண்டறக் கலந்தே வாழ்கிறோம். எனவே அவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். அவர்கள் ஆவேசப்படுகின்ற, ஆத்திரப்படுகின்ற சூழ்நிலைகளை நாம் உருவாக்கக் கூடாது.
இஸ்லாம் இம்மை, மறுமை பயன்களை அடைந்துகொள்ளக் கூடிய வகையில் பெருநாளைக் கொண்டாட வழிகாட்டியுள்ளது.
முஸ்லிம் மக்கள் அனைவரும் இன்று புனித நோன்பு பெருநாளை அனுஷ்டிக்கின்றனர்.
சந்திரனின் சுழற்சியை வைத்து கணக்கிடப்படும் இஸ்லாமிய மாதங்களில் ஒன்பதாவது மாதம் புனித ரமழான் மாதமாகும். அகிலத்திற்கும் ஓர் அருட்கொடையான புனித அல்குர்ஆன் ரமழான் மாதத்திலேயே பூமிக்கு அருளப்பெற்றது.
இந்த மாதத்தில் விழித்திருந்து, பசித்திருந்து, தனித்திருந்து ஒரு மாதகாலமாக நோன்பு கடைபிடித்திருந்த முஸ்லிம் மக்கள் இன்று நோன்பு பெருநாளை அனுஷ்டிக்கின்றனர்.
நோன்பு பெருநாளை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று காலை விசேட பெருநாள் தொழுகை மற்றும் பிரார்த்தனைகள் இடம்பெறுகின்றன.
இதேவேளை கடந்த நாட்களில் இடம்பெற்ற அசாதாரண நிலைமைகளை தொடர்ந்து பள்ளிவாசல்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.