சம்பந்தன் 8 வருடங்களாக எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில்!
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் கொழும்பு 7, மஹகமசேகர மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சுமார் 8 வருடங்களாக தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் காணி மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சராக இருந்த கயந்த கருணாதிலக்க அவர்களால் 2019 பெப்ரவரி 26ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் ஒன்றின் ஒப்புதலுக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் வரை இந்த வீடு அவரது பாவனைக்காக தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது.
சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியிலிருந்து அண்மையில் விலகியிருந்தார். இப்போது அவர் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே.
கடந்த ஆகஸ்ட் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் பின்னர், ஆர் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றபோது இந்த உத்தியோகபூர்வ இல்லம் அவருக்கு வழங்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டதன் மூலம் உருவாக்கப்பட்ட 52 நாள் ஆட்சி மாற்றத்தின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற போதும் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.