பெங்களூர் குண்டுவெடிப்பு;சந்தேக நபரின் சிசிடிவி காட்சி வெளியீடு!

பெங்களூர் குண்டுவெடிப்பு;சந்தேக நபரின் சிசிடிவி காட்சி வெளியீடு!

பெங்களூருவில் நேற்று (01) ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக 4 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு ஒயிட்பீல்டு ராமேஸ்வரம் கஃபேவில் நேற்று (01) பிற்பகல் 1 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. இதில் உணவக பணியாளர்கள் ஃபரூக் ஹூசேன் (26), திவிபான்சூ (25) ஆகிய இருவர் உட்பட 7 வாடிக்கையாளர்கள் படுகாயம் அடைந்தனர். அதில் 2 பேர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் என‌ தெரியவந்துள்ளது. மொத்தம் 10 பேர் காயமடைந்ததாக இன்றைய (02) தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் ஒயிட் ஃபீல்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இன்று காலை முதல் தேசிய பாதுகாப்புப் படையினர் (NSG) நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் ராமேஸ்வரம் கஃபேவில் வெடிகுண்டை வைத்தவர் என சந்தேகிக்கப்படும் நபரின் நடமாட்டம் அடங்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தொப்பி, கண்ணாடி, பேன்ட் சட்டை என நேர்த்தியாக ஆடை அணிந்து கையில் பையுடன் அந்த நபர் வேகமாக நடந்து செல்லும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது. உணவகத்துக்குள் உள்ள சிசிடிவி காட்சியில் அதே நபர் கைப்பையை அங்கே வைத்துவிட்டு வெளியேறுவதும் பதிவாகியுள்ளதாகத் தெரிகிறது. அந்த நபர் உணவகத்தில் பையை வைத்துவிட்டுச் சென்ற சில நிமிடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது எனக் கூறப்படுகிறது. இதனால் அவரைக் கண்டறிய தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றன. தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியைத் தேடும் பணி நடந்த நிலையில் அந்த நபரை மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அந்த நபர் உடுப்பியில் இருந்து வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் உடுப்பி, மங்களூரு பகுதிகளுக்கும் தனிப்படை போலீஸார் சென்றுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This