மஹிந்த, லசந்த, துமிந்த நீதிமன்றுக்கு!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து தம்மை நீக்கியமைக்கு எதிராக இன்று (01) நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் மஹிந்த அமரவீர, பொருளாளர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கடந்த 30ம் திகதி கட்சித் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், செயற்குழுவில் இந்த தீர்மானங்கள் எட்டப்பட்டிருந்தது.
அதன்படி, கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து துமிந்த திஸாநாயக்க நீக்கப்பட்டு குறித்த பதவிக்கு கே.பி.குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், லசந்த அழகியவன்ன பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு குறித்த பதவிக்கு ஹெக்டர் பெத்மகே நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், மஹிந்த அமரவீர சிரேஷ்ட உப தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ள நிலையில் சரத் ஏக்கநாயக்க அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சி மேலும் தெரிவித்திருந்தது.