டெல்லியில் இந்தியா கூட்டணி போராட்டம் : முக்கிய தலைவர்கள் வருகை!
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, புதுடெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சியினர் சார்பில் மாபெரும் போராட்டம் இன்று (31) நடைபெறுகிறது.
இதில் மல்லிகாா்ஜுன் காா்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், ஜாா்கண்ட் முதல்வா் சம்பாய் சோரன், சரத் பவாா், உத்தவ் தாக்கரே,அகிலேஷ் யாதவ்,தேஜஸ்வி யாதவ், விசிக தலைவர் தொல். திருமாவளவன், திமுக சார்பில் எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சோ்ந்த முக்கியத் தலைவா்கள் கலந்து கொள்கின்றனா். அதிகளவிலான பொதுமக்கள் கலந்து கொள்வாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இதையொட்டி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவால் ,பஞ்சாப் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவருமான பகவந்த் மானுடன் ராம் லீலா மைதானத்திற்கு சென்றடைந்தார்.
விசிக தலைவர் தொல். திருமாவளவன், திருச்சி சிவா, காங்கிரஸ் தலைவர்கள் சுப்ரியா ஸ்ரீநேத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பிருந்தா காரத், அகிலேஷ் யாதவ், மெகபூபா முஃப்தி, உத்தவ் தாக்கரே உள்பட இந்தியா கூட்டணியில் உள்ள அரசியல் தலைவர்கள் பலர் ராம்லீலா மைதானத்திற்கு சென்றடைந்துள்ளனர்.
இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.