விமான நிலையத்தில் பயணிகள் தொலைத்த ரூ.63.8 கோடி பொருட்களை மீட்டது சிஐஎஸ்எப்!
விமான நிலையங்களில் பயணிகள் பொதுவாக செல்போன், மடிக்கணினி, பணப்பை போன்றவற்றை தவறவிட்டு செல்வது வாடிக்கையாக உள்ளது. இவைதவிர, இயர்பட்ஸ், ஸ்மார்ட் வாட்ச், புளூடூத் ஹெட்போன், சன்கிளாஸ், பிளாஸ்க், சிப்பர், கண் கண்ணாடிகள் போன்ற சிறிய பொருட்களையும் பயணிகள் அதிகளவில் தொலைத்து விடுகின்றனர்.
2023 ஏப்ரல் முதல் 2024 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் 68 விமான நிலையங்களில் பயணிகள் தொலைத்த ரூ.63.80 கோடி மதிப்பிலான இதுபோன்ற பொருட்களை மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) மீட்டுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டிலும் 66 விமான நிலையங்களில் பயணிகள் தொலைத்த ரூ.56.11 கோடி மதிப்புள்ள பொருட்களை உரிய சரிபார்ப்புக்குப் பிறகு அவர்களிடமே சிஐஎஸ்எப் ஒப்படைத்துள்ளது.
அயோத்தியில் உள்ள விமான நிலையம் உட்பட 68 விமான நிலையங்கள், துறைமுகங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளி நிறுவனங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் உட்பட 358 முக்கியத்துவம் வாய்ந்தநிறுவனங்களுக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பை வழங்கி வருகிறது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங் உட்பட 154 பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கு சிஐஎஸ்எப்-ன் சிறப்பு குழு பாதுகாப்பை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.