மாலைதீவில் கடல்சாா் ரோந்து பணிக்கு துருக்கி ட்ரோன்கள்!
மாலைதீவின் கடல் பகுதிகளைக் கண்காணிக்கும் ரோந்து பணிக்காக துருக்கியிடமிருந்து இராணுவ ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) அந்த நாடு முதல்முறையாக கொள்முதல் செய்துள்ளது.
துருக்கியிடமிருந்து பெறப்பட்டுள்ள இராணுவ ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கு பிரத்யேக தளத்தை நிறுவுவதற்கான முயற்சிகளும் மாலைதீவு அரசால் தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பா் மாதம் மாலைதீவு ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் முதல் வெளிநாடாக துருக்கிக்கு முகமது மூயிஸ் அரசு முறைப் பயணம் மேற்கொண்டாா். இந்தப் பயணத்தின்போது துருக்கி தயாரிப்பு இராணுவ வாகனங்களைப் பாா்வையிட்ட மூயிஸ், இராணுவ ஆளில்லா விமானங்களைக் கொள்முதல் செய்ய துருக்கியின் ‘பேகா் டிஃபென்ஸ்’ நிறுவனத்துடன் ஒப்பந்தத்திலும் ஈடுபட்டாா்.
எனினும், இந்த ஒப்பந்தம் குறித்த விவரங்களை மாலைதீவு அரசு இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில், துருக்கியில் தயாரிக்கப்பட்ட ‘பேராக்டா் டிபி2’ ஆளில்லா விமானங்கள் கடந்த 3ஆம் திகதி மாலத்தீவு அரசிடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடா்ந்து, மாலைதீவு கடற்பரப்பில் கண்காணிப்பு அமைப்பை நிறுவி, அதன் பிரத்யேக பொருளாதார மண்டலத்தின் (கடல் எல்லைப் பகுதி) கட்டுப்பாட்டை உறுதி செய்ய மாலைதீவு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி மூயிஸ் கடந்த 4ஆம் திகதி அறிவித்தாா். முன்னதாக, நிகழாண்டின் தொடக்கத்தில், பாதுகாப்பு சேவைகளில் பயன்படுத்தப்படும் பொருள்களுக்கான இறக்குமதி வரிகளை நீக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிருக்கு வழங்குவதற்காக இறக்குமதி வரி விலக்கு நடைமுறையை ஜனாதிபதி அலுவலகம் திருத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இராணுவ ஆளில்லா விமானங்களை வாங்குவதற்கு வசதியாகவே விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதாக கருதப்படுகிறது. சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட மாலைதீவு ஜனாதிபதி மூயிஸ், கடந்த ஜனவரியில் சீனாவில் இருந்து திரும்பியதும் ஆளில்லா கண்காணிப்பு விமானங்களைப் பெற விரும்புவதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.