நல்லிணக்க இடைக்கால செயலக பணிப்பாளருக்கு சிவில் சமூகப்பிரதிநிதிகள் கடிதம்!

நல்லிணக்க இடைக்கால செயலக பணிப்பாளருக்கு சிவில் சமூகப்பிரதிநிதிகள் கடிதம்!

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகமானது அதன் கலந்தாராய்வு செயன்முறையின்போது போரினால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு மக்களுடன் விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுக்கத்தவறியிருப்பதாகவும், நிலைமாறுகால நீதிப்பொறிமுறையில் மிகமுக்கிய தரப்பினரான வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சந்திப்பதற்கு அச்செயலகம் முயற்சிக்கவில்லை எனவும் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதுமாத்திரமன்றி சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்கான பாதையென்பது சம்பந்தப்பட்ட தரப்பினர் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதுடன், அர்த்தமுள்ள நடவடிக்கைகயை முன்னெடுப்பதன் மூலமே சாத்தியமாகும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சட்ட மற்றும் சமூக நிதியம், விழுது, வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு, சூழலியல் நீதிக்கான மக்கள் கூட்டிணைவு, பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு, குரலற்றவர்களின் குரல் உள்ளிட்ட 34 சிவில் சமூக அமைப்புக்களும், மைத்ரேயி ராஜசிங்கம், ஷ்ரீன் ஸரூர், அம்பிகா சற்குணநாதன், சகுந்தலா கதிர்காமர், ஜெயதீபா புண்ணியமூர்த்தி உள்ளிட்ட 40 சிவில் செயற்பாட்டாளர்களும் கையெழுத்திட்டு உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவன்சவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியிருப்பதாவது:

உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த மாதம் 9 மற்றும் 26 ஆம் திகதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் பங்கேற்றமை உள்ளடங்கலாக எம்மில் சிலர் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகத்துடன் தொடர்புபட்டு செயலாற்றிவருகின்றோம்.

அதன்படி இந்த உத்தேச ஆணைக்குழு தொடர்பில் தமது கரிசனைகளையும், அரசாங்கத்துக்கான நிபந்தனைகளையும் உள்ளடக்கி வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் சிவில் சமூக அமைப்புக்களால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 4 அறிக்கைகளை மீண்டும் உங்களது கவனத்துக்குக் கொண்டுவருகின்றோம். தமிழ்மக்கள் மத்தியில் நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கும், தமிழர்களுக்கும் அரசுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டிருக்கும் விரிசலை சீரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அவ்வறிக்கைகளில் முன்வைக்கப்பட்டிருந்த பிரதான நிபந்தனையாகும். இருப்பினும் அவ்வறிக்கைகளில் உள்ளடக்கப்பட்டிருந்த நிபந்தனைகளில் குறைந்தபட்சம் ஒன்றையேனும் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தற்போதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இது தமிழர்களுக்கான தீர்வை வழங்குவதற்குரிய நேர்மையான அரசியல் தன்முனைப்பின்றி உண்மை, நீதி மற்றும் இழப்பீடு என்பன சாத்தியமில்லை என்ற எமது கரிசனை நியாயமானதே என்பதைக் காண்பிக்கின்றது.

அதேபோன்று உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகமானது அதன் கலந்தாராய்வு செயன்முறையின்போது போரினால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு மக்களுடன் விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுக்கத்தவறியமை எமது சந்தேகத்தை மீளுறுதிப்படுத்துகின்றது. அதுமாத்திரமன்றி கடந்த மாதம் 9 மற்றும் 26 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்கு வடக்கு, கிழக்கைச்சேர்ந்த மிகச்சில அமைப்புக்களுக்கும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்குமே அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. நிலைமாறுகால நீதிப்பொறிமுறையில் மிகமுக்கிய தரப்பினரான வட, கிழக்கு மாகாணங்களைச்சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சந்திப்பதற்கு உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகம் முயற்சிக்கவில்லை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 1983 – 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியிலும், அதற்குப் பின்னரும் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுமென உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தில் கூறப்பட்டுள்ள போதிலும், சம்பந்தப்பட்ட சமூகத்துடன் போதியளவிலான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் புதியதொரு தீர்மானத்தைக் கொண்டுவரவேண்டிய அவசியமில்லை என சர்வதேச சமூகத்தை கருதவைக்கும் ஒரு முயற்சியாகவே அரசாங்கம் இந்த ஆணைக்குழுவை முன்மொழிந்திருக்கிறது என நாம் கருதுகின்றோம். தமிழ்ச்சமூகத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மீறல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதுடன், தமிழர்களின் பல தசாப்தகாலத் துயரத்துக்குத் தீர்வை வழங்குவதே அரசாங்கத்தின் உண்மையாக நோக்கமாக இருந்தால், வட, கிழக்கு சிவில் அமைப்புக்களால் ஏற்கனவே வெளியிடப்பட்ட 4 அறிக்கைகளிலுள்ள சில நிபந்தனைகளையாவது அரசாங்கம் நடைமுறைப்படுத்தும்.

வட, கிழக்கில் உள்ள சிவில் சமூகப்பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் உள்ளிட்டோர் பாதுகாப்புத்தரப்பினரின் தொடர் கண்காணிப்புக்கும், ஒடுக்குமுறைகளுக்கும், மீறல்களுக்கும் உட்படுத்தப்பட்டுவருகின்றனர்.

இந்நிலையில் வடக்கு, கிழக்கு மக்களின் குரலுக்கு செவிசாய்க்குமாறும், அவ்விரு மாகாணங்களையும் சேர்ந்த சிவில் சமூகப்பிரதிநிதிகளால் ஏற்கனவே வெளியிடப்பட்ட 4 அறிக்கைகளில் உள்ள நிபந்தனைகளையும் நடைமுறைப்படுத்துமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்கான பாதையென்பது சம்பந்தப்பட்ட தரப்பினர் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதுடன், அர்த்தமுள்ள நடவடிக்கைகயை முன்னெடுப்பதன் மூலமே சாத்தியமாகும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This