ரஷ்யா இராணுவத்திற்கு பணியாற்றிய இந்தியர் உயிரிழப்பு!

ரஷ்யா இராணுவத்திற்கு பணியாற்றிய இந்தியர் உயிரிழப்பு!

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா சார்பில் போரில் ஈடுபட்ட இந்தியர் உயிரிழந்தார். இதனை ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தி இருக்கிறது. ரஷ்யா – உக்ரைன் போரில் உயிரிழந்த இந்தியர், ஐதராபாத்தை சேர்ந்த முகமது அஸ்ஃபான் ஆவார். ஆனால், அவர் எதற்காக ரஷ்யா சென்றார், அங்கு அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

“இந்தியர் ஸ்ரீ முகமது அஸ்ஃபான் என்பவர் உயிரிழந்துவிட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. நாங்கள் ரஷ்ய அதிகாரிகள் மற்றும் உயிரிழந்தவரின் குடும்பத்தாருடன் தொடர்பு கொண்டிருக்கிறோம். அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்று ரஷ்யாவுக்கான இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

அதிக சம்பளம் கிடைக்கும் என கூறி வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்பட்ட இந்தியர்களில் ஒருவர் அஸ்ஃபான் என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். அஸ்ஃபான் உயிரிழந்த தகவல் அவர்களுக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் அசாதுதீன் ஒவைசி மூலமாக தெரிந்து கொண்டதாக குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஒவைசி வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் தெலுங்கானா, குஜராத், கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தர பிரதேசம் மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் பலர் இந்த விவகாரம் தொடர்பாக ஏமாற்றப்பட்டுள்ளனர். ஏமாற்றி அழைத்து செல்லப்பட்டவர்களுக்கு வேலை கொடுக்காமல் போரில் பங்கேற்க கட்டாயப்படுத்துகின்றனர் என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஒவைசி எழுதிய கடிதத்திற்கு பதில் அளித்த மத்திய வெளியுறவு துறை அமைச்சகம், ரஷ்யாவில் சிக்கி தவிக்கும் 20 இந்தியர்கள் உதவி கோரியுள்ளதாகவும், அவர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. துபாயை சேர்ந்த ஃபைசல் கான் என்பவரே இந்தியர்களை அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கும் என கூறி ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This