ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டத்திற்கு சுமார் ரூ.1,260 கோடி செலவு
உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறிய ஒரு திருமண விழாதான் அம்பானி குடும்ப திருமணம். இந்தியா மட்டுமின்றி சர்வதேச ஊடகங்கள் முழுவதும் இந்தத் திருமண விழாவைப் பற்றிய செய்திகளைத்தான் நொடிக்கு நொடி ஒளிபரப்பின.
முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் அவரது மனைவி ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணமே அதுவாகும்.
இந்தியாவை மட்டுமன்றி உலகம் முழுவதையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஆடம்பர திருமண விழா இதுவாகும்.
ஆனந்த் அம்பான -ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்திய விழா மார்ச் 1 முதல் 3 வரை 3 நாட்கள் நடைபெற்றது.
அம்பானி குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் இந்தத் திருமண விழாவில் கலந்து கொண்டனர். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், மெட்டா தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க், இவான்கா ட்ரம்ப் மற்றும் உலகின் பல முன்னணி நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள், அரசியல் பிரபலங்கள் என ஒரே இடத்தில் பார்க்க முடியாத உலகின் பல மிகப்பெரிய வி.ஐ.பி-க்கள் இந்த ஆடம்பர திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
இவர்களின் வருகைக்காக 10 நாட்களுக்கு மட்டும் ஜாம்நகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இந்த விழாவிற்காகவே கட்டப்பட்ட ஆடம்பர சொகுசு விடுதியில் தங்கினர். அவர்கள் பாப் ஐகான் ரிஹானாவின் பாட்டைக் கேட்டு மகிழ்ந்தனர். இரண்டு மணி நேர நிகழ்வுக்கு $6 மில்லியன் (இந்திய நாணயத்தில் சுமார் ரூ. 52 கோடி) அவருக்கு ஊதியமாக வழங்கப்பட்டது.
இதுமட்டுமின்றி இந்தியாவின் பல உச்ச நட்சத்திரங்கள் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு நடனமாடினர். இதன் உச்சக்கட்டமாக பாலிவுட்டின் மூன்று கான்களான ஷாருக்கான், சல்மான்கான் மற்றும் அமீர் கான் ஆகிய மூவரும் ஒன்றாக இணைந்து நடனமாடினார்கள். இந்த கூட்டணியை எந்த திரைப்படத்திலும் கூட பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தனது மனைவி மற்றும் மகளுடன் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இவ்வளவு பிரம்மாண்டங்கள் நிறைந்த இந்த திருமணம் நிச்சயமாக சிறிய அளவிலான தொகையில் நடந்திருக்காது. ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்திய 3 நாள் கொண்டாட்டங்களுக்கு 1260 கோடி ரூபா செலவாகியுள்ளது.
முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 117 பில்லியன் டாலர்கள். உணவு வகைகளின் ஒப்பந்தத்திற்கு மட்டும் 200 கோடி ரூபா செலவாகியுள்ளது. இந்த திருமண விழா இந்தியாவின் மிகவும் ஆடம்பரமான திருமண விழா ஆகும்.
எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் திருமணத்தில் என்னென்ன ஆடம்பர நிகழ்வுகள் நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.