தென் அமெரிக்க சாமானிய மக்களின் போராட்டங்கள் பற்றிப் பேசும் நூல் !
ஊடகர் சண் தவராஜா
மானுட வரலாறு போராட்டங்களால் நிறைந்தது. மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான போராட்டம், மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான போராட்டம், மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான போராட்டம் என அது காலங்காலமாக நடைபெற்று வருகின்றது. தக்கென பிழைக்கும் என்ற கூர்ப்புத் தத்துவத்துக்கு ஒப்ப வல்லவன் எவனோ அவனே வெற்றி பெற்றவன் ஆகிறான்.
“இலத்தீன் அமெரிக்காவில் தேசிய இன முரண்பாடுகள்” என்ற தலைப்பிலான இந்தக் கட்டுரைத் தொகுப்பு அமெரிக்காவின் கொல்லைப் புறம் என வர்ணிக்கப்படும் தென் அமெரிக்காவில் நடைபெற்ற சாமானிய மக்களின் போராட்டங்கள் பற்றிப் பேசுகின்றது.
ஜீவநதியின் 363 ஆவது வெளியீடாக ஐங்கரன் விக்கினேஸ்வரா எழுதிய ‘இலத்தீன் அமெரிக்காவில் தேசிய இன முரண்பாடுகள்’ கட்டுரைத் தொகுப்பு தாயகத்தில் வெளியாகி உள்ளது.
இயற்கைக்கும், விலங்குகளுக்கும் எதிரான மனிதனின் போராட்டம் தவிர்க்க முடியாத ஒன்று. அது நிகழ்ந்தே ஆக வேண்டியது. ஆனால் மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான போராட்டம் அவசியமானதுதானா?
விலங்குகளோடு விலங்காக மனிதன் வாழ்ந்த காலத்தில் மனிதனின் போராட்டம் உணவுத் தேடலுக்காகவும், தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கானதாகவும் அமைந்திருந்தது.
சமூகமாக வாழத் தொடங்கிய பின்னர் ஏனைய சமூகங்களில் இருந்து தற்காத்துக் கொள்ள மனிதன் போராட வேண்டியிருந்தது. நிலவுடமைச் சமூகத்தில் அரசுகள் தோற்றம் பெற்ற பின்னர் ஏனைய அரசுகளை வெற்றி கொள்ள மனிதன் போர்களில் ஈடுபட்டான். மனிதனை மனிதன் அடிமைகள் ஆக்கினான்.
அடிமைகளைப் பண்டங்களாகக் கருதி அவர்களை விற்பனை செய்து பணம் சம்பாதிக்கும் அளவுக்கு மனிதனின் பேராசை எல்லை கடந்து சென்றது.
இயற்கையோடு இயைந்து, இயற்கையை நேசித்து, இயற்கையோடு கலந்துறவாடி வாழ்ந்த மனிதன் இயற்கையை விட்டு விலகி வெகுதூரம் சென்று தனக்கென அனைத்தையும் தேடிக் கொண்டான். அறிவியல் வளர்ச்சியும் அதன் விளைவான கைத்தொழில் புரட்சியும் மனித சமூகத்தை அசைக்க முடியாத இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றிருப்பதை நாம் அறிவோம்.
ஆனாலும், இயற்கையை நேசிக்கும், இயற்கையோடு இயைந்து வாழும் மனிதர்கள் இவ்வுலகில் முழுவதுமாக இல்லாமல் போய்விடவில்லை. பழங்குடி மக்கள் என வகைப்படுத்தப்படும் அவர்கள் இன்றைய உலகின் சகல மூலைகளிலும் வாழ்ந்த வண்ணமுமே உள்ளனர். யாருக்கும் தீங்கு இழைக்காமல் வாழ விரும்பும் அவர்களை நவீன உலகின் கொடுங்கரங்கள் விட்டு வைக்கவில்லை.
பொருள் ஈட்டுவதற்கான நவீன வாழ்வியல், இயற்கை வளங்களைக் கொள்ளையிட வேண்டிய தேவையை ஏற்படுத்தி வைத்திருக்கின்றது. அதற்காக, இயற்கை வளங்களுக்குக் காவலாக யார் யார் இருக்கிறார்களோ அவர்களை முடிந்தால் அப்புறப்படுத்த வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்குகின்றது. இந்த முயற்சியில், இயற்கையின் காவலர்களாக உள்ள பழங்குடி மக்களே முதல் பலியாக ஆகும் நிலை உள்ளது.
இயற்கையோடு இயைந்து, எளிமையான வாழ்க்கை வாழும் பழங்குடி மக்களால் வலிமையான அரசாங்கங்களை எதிர்க்க முடியுமா? அத்தகைய அரசாங்கங்களின் முழுமையான ஆசீர்வாதத்தோடு களமிறங்கும் பன்னாட்டு நிறுவனங்களோடு போராடி வெல்ல முடியுமா? முடியாது என்று தெரிந்து கொண்ட பின்னரும் ஓர்மத்தோடு போராடும் பழங்குடி மக்களின் வாழ்வியலை, அவர்களின் போராட்டத்தைப் பதிவு செய்யும் ஒரு முயற்சிதான் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு.
அதே சமயம் நவீன காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிரான எதிர்ப்பையும், அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டங்களின் தகவல்களையும் அவர் பதிவு செய்துள்ளார். வலதுசாரிக் கொடுங்கோன்மை ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதங்களை மாத்திரமன்றி இடதுசாரி, பொதுவுடமைக் கருத்தையும் கையில் ஏந்த வேண்டிய நிலையில் தென்னமெரிக்க மக்கள் உள்ளனர் என்பதையும் அவர் சமரசமின்றி பதிவு செய்துள்ளார்.
‘நாடுகாண் பயணம்’ என்ற பெயரில் ஐரோப்பியர்களால் உலகெங்கும் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத படையெடுப்புகள் அந்த நாடுகளில் வாழ்ந்த மக்கள் மீது இழைத்த குற்றங்கள் வரலாற்றில் கறுப்புப் பக்கங்களாக உள்ளன. தமது கடந்தகாலத் தவறுகளைப் பெருமையாகக் கருதும் அந்த நாடுகளின் ஆட்சித் தலைவர்கள் தற்காலத்திலும் ஏதோவெரு வழிமுறையின் ஊடாக அவற்றைத் தொடர்வதற்கு, அந்த நாடுகளின் இயற்கை வளங்களைக் கொள்ளையிடுவதற்கு முனைப்புக் காட்டிய வண்ணமுயே உள்ளனர்.
சொந்த மண்ணில் நடைபெறும் இத்தகைய கொடுமையை எதிர்ப்பதில் தேசபக்தி கொண்ட மக்கள் துணிகரமாகச் செயற்பட்டு வருகின்றனர். இதுவே இன்றைய உலகின் போக்காகவும் உள்ளது.
ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை பன்னாட்டு அரசியல் தொடர்பிலான அவர்களது அக்கறை வெகு சொற்பமே. அது தொடர்பில் அவர்கள் பெரிதும் அலட்டிக் கொள்வதில்லை. ஊடகங்கள் கூட பன்னாட்டு அரசியல் விவகாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதில்லை. அது தொடர்பில் எழுதுகின்ற ஊடகர்களும், பத்தி எழுத்தாளர்களும் கூட தமிழில் வெகு சொற்பமானோரே.
ஆனால், ஈழப் போராட்டம் பன்னாட்டு அரசியல் தொடர்பான ஒரு புதிய வாசலைத் திறந்து வைத்தது. அதன் பிற்பாடே ஈழத் தமிழர்கள் உலக அரசியலில் ஓரளவேனும் அக்கறைப் காட்டத் தொடங்கினார்கள். புதிய பத்தி எழுத்தாளர்கள் உருவாகினார்கள்.
நூலாசிரியர் ஐங்கரன் விக்னேஸ்வரா பன்னாட்டு அரசியல் தொடர்பில் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருக்கும் ஒருவர். வாரத்துக்கு ஐந்து, ஆறு கட்டுரைகளையேனும் எழுதிவிடும் ஆற்றல் கொண்டவராக அவர் உள்ளார். அதற்கான தேடல், வாசிப்பு என்பவற்றுக்கு அவரால் நேரம் ஒதுக்க முடிகின்றது. உண்மையில் இது ஒரு சாதனையே.
இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் தென்னமெரிக்க நாடுகளில் நிலவும் அரசியல் சூழலையும், மக்கள் போராட்டங்களையும், அவற்றின் பின்னணியையும் ஓரளவு அறியத் தருகின்றன.
30 ஆண்டு காலமாக இன விடுதலைக்காகப் போராடிய ஈழத் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள் பல இந்தக் கட்டுரைத் தொகுப்பில் உள்ளன. ஒவ்வொரு ஈழத் தமிழரும், குறிப்பாக அரசியல் பின்புலம் கொண்ட யாவரும் வாசிக்க வேண்டிய நூல் இது.
புத்தக வாசிப்புப் பழக்கம் இன்றைய உலகில் அருகி வருகின்றது என்பது ஒன்றும் இரகசியமான செய்தி அல்ல. ஆனாலும், அச்சுப் பதிப்பு நூல்கள் தொடர்ந்தும் வெளிவரவே செய்கின்றன. நூல்களை இணையத்தில் தரவிறக்கம் செய்து வாசிக்கும் அல்லது ஒலி வடிவில் கேட்கும் வசதி வந்துவிட்டாலும் புத்தகத்தைக் கையில் எடுத்து வாசிக்கும் போது கிட்டும் சுகானுபவம் அலாதியானது. எனவே, அச்சுப் பதிப்பு நூல்களின் வருகை நின்றுபோய் விடாது என்பது என் போன்றோரின் திடமான நம்பிக்கை.
ஊடகர், சண் தவராஜா, சுவிஸ்.