எப்போது நாட்டை விட்டு இன்னொரு நாட்டிற்கு தப்பிச் செல்லலாம்?

எப்போது நாட்டை விட்டு இன்னொரு நாட்டிற்கு தப்பிச் செல்லலாம்?

இலங்கையில் இருக்கும் இளைஞர்களுக்கு இடம்பெறும் அநீதியாக 455 CC இற்கும் 1,300 CC திறனுடைய மோட்டர் சைக்கிளை பதிவு செய்ய வேண்டும் என அமைச்சர் முன்மொழிவு வழங்கி இருக்கிறார் என இன்று (05) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டில் இளம் சந்ததிகளுக்கு வயது வித்தியாசம் இன்றி மோட்டார் சைக்கிளில் பிரயாணிக்க முடியாத அநீதி ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் காணப்படும் மிக முக்கிய பிரச்சனையாக, இளம் சந்ததியினருக்கு நடக்கும் ஒரு அநீதியாக 150 CC – 1300 CC வரையுமான மோட்டார் சைக்கிள்களை இலங்கைக்குள் பதிவு செய்வதற்கு அனுமதி வேண்டும்” எனக் கூறி அமைச்சர் ஒரு முன்மொழிவினைக் கொண்டு வந்துள்ளார்.

என்னைப் பொறுத்த வரையில் நாட்டில் அவ்வாறான தேவை உள்ளவர்கள் இருந்தால் அதற்கு அமைச்சர்கள் பேசி ஒரு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும். நான் கூற வந்த விடயம் அமைச்சர் அவர்களே! நீங்கள் ஒரு அமைச்சராக இருந்த காலப்பகுதியில் உங்களுடைய அரசாங்கம், ஆட்சி முறை, உங்களுடைய முன்னாள் தலைவர் இணைந்து நாட்டினை வங்குரோத்து நிலைக்கு உள்ளாக்கியதால் இன்று வடக்கு, கிழக்கில் இருக்கும் எத்தனையோ தமிழ் இளைஞர்கள் இலங்கை நாட்டிலே இருக்க முடியாத அளவுக்கு ஒரு சூழலை ஏற்பட்டு அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கான சூழல் அமைந்துள்ளது.

இன்று எங்களுடைய வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர்களை பார்த்தால் எப்போது நாட்டை விட்டு இன்னொரு நாட்டிற்கு தப்பிச் செல்லலாம்? இந்த நாட்டை விட்டு எவ்வாறு போகலாம்? என்று பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

தெற்கில் உள்ள இளைஞர்களுக்கு அவ்வாறான பிரச்சனை இல்லை என இந்த மோட்டார் சைக்கிள் பதிவினை நீங்கள் முன்வைக்கின்றீர்கள். அதை இந்த சபை ஏற்றுக்கொள்ளுமாக இருந்தால் நீங்கள் அதனை செய்து கொள்ளுங்கள். ஆனால் இந்த நாட்டிலே வடக்கு, கிழக்கு தமிழ் இளைஞர்களுக்கு எத்தனையோ பிரச்சனைகள் உள்ளன. இப் பிரச்சனைகள் கௌரவ உறுப்பினர் அவர்களுக்கு தெரியுமா? என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன்.

இன்று வடக்கு, கிழக்கிலே வேலை வாய்ப்பு இல்லை, தொடர்ந்தும் இளைஞர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வைத்து சித்திரவதை செய்யப்படுகின்றார்கள், இன்னும் இந்த நாட்டிலே காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இன்று இளைஞர்களுக்கு அநீதி நடக்கிறது, உல்லாசமாக 450 CC க்கு மேல் வேகமாக போக முடியாது என்பது உங்களது கண்ணுக்கு அநீதியாக தெரிகிறது. ஆனால் எங்களது இளைஞர்கள் எத்தனையோ பேர் காணாமல் ஆக்கப்பட்டது ஒரு அநிதியாக உங்களுக்கு தெரியவில்லை. நாட்டினுடைய முன்னாள் நிதி அமைச்சர் அவர்கள் நாட்டிற்கு வருகை தந்த பொழுது நீங்களும் அந்த விமான நிலையத்தில் உங்களுடைய புகைப்படத்தை எடுத்துக் கொண்டீர்கள்.

அவரை வரவேற்க சென்று இருக்கின்றீர்கள். நீங்கள் அனைவரும் இணைந்து தான் இந்த நாட்டை வங்குரோத்து நிலைக்கு உள்ளாக்கினீர்கள். இன்று இந்த அரசாங்கத்தின் உடைய ஒரு பிரச்சனையாக இன்று இளைஞர்களுக்கு நடக்கும் ஒரு அநீதியாக இந்த ஒத்திவைக்கும் பிரேரணையை நீங்கள் முன்மொழிவது வேடிக்கையான ஒரு விடயம்.

இங்கு வருகை தந்திருக்கும் இளைஞர்களுக்கும், 1300 CC சிகிச்சை மோட்டார் சைக்கிள் செலுத்துபவர்களுக்கோ அல்லது 450 CC சிகிச்சை மோட்டார் சைக்கிள் செலுத்துபவர்களுக்கோ நான் எதிரானவன் அல்ல. அவ்வாறு வசதி இருந்தால் நீங்கள் இறக்குமதி செய்து, அதற்கு சரியான அனுமதியைப் பெற்று, பதிவு செய்து, நீங்கள் அதனை செலுத்துங்கள்.

ஆனால் நான் சொல்ல விரும்பிய விடயம் இதுதான். இன்று நாட்டினுடைய நிலைமை இன்று வடக்கு கிழக்கில் எங்களுடைய இளைஞர்கள் ஒரு ஈருருளி வாங்கக்கூட வசதியற்றிருக்கின்றார்கள். இதற்கான காரணம் நீங்கள் இந்த நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு கொண்டு வந்தமையே. இன்று இந்த நாட்டிலே ஒரு TVS, 50 CC மோட்டார் சைக்கிள் கூட வாங்க முடியாது எத்தனையோ இளைஞர்கள் உள்ளார்கள்.

மோட்டார் சைக்கிள் வாங்கியவர்கள் வீசிங் கட்ட முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இதெல்லாம் உங்களுடைய கண்களுக்கு பிரச்சினையாக தெரியவில்லை. எங்களுடைய பிரதேசங்களில் எங்கள் இளைஞர்கள் வாழ்வாதாரத்தினை இழந்துள்ளார்கள். அவ்வாறிருக்க இன்று ஒரு ஒத்திவைக்கும் பிரேரணை வேடிக்கையான ஒரு விடயம்.

இதற்கு அனுமதி வழங்கும் போது சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள், அவர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என கூறுகின்றீர்கள். உங்களுடைய செயல்பாட்டினால் எத்தனையோ மக்கள் இன்று அடுத்த உணவு எவ்வாறு உண்பது என்று தெரியாத நிலையில் உள்ளனர். இன்று எத்தனை இளைஞர்கள் தங்கள் வயோதிப தந்தையருக்கு மருந்து வாங்குவது என தெரியாது உள்ளனர்.

எத்தனையோ தாய், தந்தையர் தங்களது குழந்தைகளுக்கு பால்மா வாங்க கூட பணமின்றி உள்ளார்கள். எத்தனையோ வைத்தியசாலைகளில் மருந்துகள் இன்றி அந்த வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகளை தனியார் பாமசிகளூடாக வாங்கி தங்களுடைய உறவினர்களை குணமடைய செய்ய முடியாத நிலையில் இருக்கின்றார்கள்.

இன்று எல்லா கட்சிகளிலும் அமைச்சர் பதவியினை வைத்திருந்த இந்த அமைச்சர் இந்த ஒத்திவைக்கும் பிரேரணையை இன்று கொண்டு வந்துள்ளார். நாங்கள் ஆயிரக்கணக்கான பிரச்சினைகளை இந்த பாராளுமன்றத்திலும், ஜனாதிபதிக்கு முன்பாகவும் முன் வைத்துள்ளோம்.

ஆனால் இவற்றுக்கு எந்த ஒரு தீர்வும் இல்லை. தமிழ் மக்களாகிய எங்களது நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கோரும் பொழுது அவற்றுக்கு முன்னுரிமை வழங்காமல் இன்று இந்த சபையிலே இப் பிரேரணைக்கு முன்னுரிமை வழங்குவதனை பார்க்கும் போது வேடிக்கையாக உள்ளது என தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This