அரசியலமைப்பை வெளிப்படையாகவே மீறும் சபாநாயகர் – சஜித் குற்றச்சாட்டு!

அரசியலமைப்பை வெளிப்படையாகவே மீறும் சபாநாயகர் – சஜித் குற்றச்சாட்டு!

ஜனநாயகக் கலாச்சாரத்தில் பிரதான முத்தூண்களான சட்டவாக்கம், நிறைவேற்றுநர் மற்றும் நீதித்துறை, போலவே அவற்றின் அதிகாரங்கள், தடைகள் மற்றும் சமன்பாடுகள், அடிப்படை உரிமைகள் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்களை பாடசாலை மாணவர்களுக்கு போதிக்க வேண்டும். மேலும் நாட்டின் 220 இலட்சம் மக்களும் இதைப் பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் மா அதிபர் நியமனத்தில் கூட நாட்டின் உயரிய சட்டத்தை மறந்துவிட்டு தம் இஷ்டம் போல நடந்து நியமனத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி சட்டத்தை ரத்து செய்ய கடினமாக இருப்பதால், ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது சிரமமான விடயம் என்பதனால் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் நோக்கில் அரசியலமைப்பு பேரவை உருவாக்கப்பட்டது.

இங்கு ஜனாதிபதியால் முன்மொழியப்படும் பெயரை அங்கீகரிக்கவும் நிராகரிக்கவும் 5 வாக்குகள் தேவைப்பட்டாலும், பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் போது சபாநாயகர் அதனை மறந்து விட்டார் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபர் நியமனத்திற்கு 4 பேர் ஆதரவாகவும் 2 பேர் எதிராகவும் 2 பேர் வாக்களிக்காமலும் இருந்தனர். சபாநாயகர் தனது அறுதியிடும் வாக்கை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி பொலிஸ் மா அதிபரை நியமித்துள்ளார்.

இது அப்பட்டமான அரசியலமைப்பு மீறல், இது சட்டவிரோத நியமனம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியும் சபாநாயகரும் அரசியலமைப்பை பின்பற்றவில்லை. நாட்டில் சட்டம் செயல்படாது, அநீதியே அரங்கேறி வருகிறது. இதன் மூலம் நாட்டின் ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிட்டது என்ற சமிக்ஞையை சபாநாயகர் வழங்கியுள்ளார்.

நாட்டின் 220 இலட்சம் மக்களையும் சபாநாயகர் ஏமாற்றி விட்டார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சபாநாயகரே அரசியலமைப்பையும், அதன் ஷரத்துகளையும் அப்பட்டமாக மீறும் வேளையில், இவ்வாறான சட்ட விரோத செயல்களை செய்யும் சபாநாயகர் இருக்கும் சபையில் எவ்வாறு அமர்வது என்ற பிரச்சினை எழுந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் பஸ் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ், 83 ஆவது கட்டமாக 50 இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை பஸ் பிங்கிரிய, ஸ்ரீ சாரனங்கர மத்திய மகா வித்தியாலயத்திற்கு

வழங்கி வைக்கும் நிகழ்வில் இன்று (29) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அதிகாரம் கிடைத்தால் பணியாற்றி காட்டுவோம் என்று வாய்ப்பேச்சில் தம்பட்டம் அடிக்கும் தரப்பினர் எதிர்க்கட்சியாக இருந்து என்ன செய்தார்கள் என்பதை மக்கள் புத்திசாலித்தனமாக சிந்தித்து பார்க்க வேண்டும்.

ஏமாற்று கதைகளை நம்பி 2019 ஆம் ஆண்டு ஏமாந்தது போன்று முட்டாள்தனமான தீர்மானங்களை எடுத்தால், இரண்டாவது தடவையாகவும் நாட்டில் பெரும் அவல நிலை உருவாகலாம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஆட்சியாளர்களின் ஏமாற்றுகளை நம்பி, பொய்யான பேச்சுக்களை நம்பி ஆட்சியாளர்களை நியமித்ததால், மக்கள் தொடர்ந்து ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்டே வருகின்றனர்.

இந்த தருணத்திலும் கூட ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றி தமது பதவி நிலைகளை பாதுகாத்துக் கொள்ளவே முயற்சிக்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This