எச்.ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

எச்.ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

புதிதாக எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு திட்டம் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் புதிய எச்ஐவி தொற்றாளர்களின் எண்ணிக்கை 14.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதன் பணிப்பாளர் சமூக மருத்துவ நிபுணர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, 694 புதிய எச்.ஐ.வி நோயாளிகள் கண்டறியப்பட்டனர், அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்களாவர்.

இதன்படி, 611 ஆண்கள் புதிதாக தொற்றுக்குள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், இது 88 வீதமாகும் என வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்தார்.

மேலும், இந்த காலப்பகுதியில், 81 பெண்கள் புதிதாக எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இது 11.7 சதவீதமாகும்.

இதன்படி, சமூகத்தில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை சுமார் 4,100 என மதிப்பிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில், 607 புதிய எச்.ஐ.வி. நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டனர்.

இதேவேளை, ஒருவர் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானால், அதன் அறிகுறிகளை வெளிப்படுத்த சுமார் எட்டு வருடங்கள் ஆகும் என வைத்திய நிபுணர் ஜானகி விதானபத்திரன சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, எச்.ஐ.வி அறிகுறிகளுக்கு நிகரான அவதானங்கள் தென்பட்டால், எச்.ஐ.வி பரிசோதனை அவசியம் எனவும், அதற்காக பல வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் ஜானகி விதானபத்திரன மேலும் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “2025-ம் ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் அதிக ஆபத்துள்ள குழுவிற்கு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக, சர்வதேச நிதியத்தின் கீழ் ஆதரவைப் பெறுவதற்கான செயற் திட்டம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​அதிக ஆபத்து உள்ளவர்களுக்கு நாங்கள் எப்போதும் அறிவுறுத்துகிறோம் எச்.ஐ.வி பரிசோதனை செய்யுமாறு. சிலர் இதற்காக தயக்கம் காட்டுகின்றனர். அவர்கள் தாங்களாகவே பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய சோதனைக் கருவிகளை ஓர்டர் செய்து இலவச கூரியர் சேவை மூலம் பெறலாம். இதற்கு Know4Sure செயலியைப் பயன்படுத்தி ஓர்டர் செய்யுங்கள், பின்னர் உங்கள் வீட்டிற்கே இலவசமாக டெலிவரி செய்யப்படும் என்றார்.

CATEGORIES
TAGS
Share This