ஸ்ரீலங்கன் விமான சேவைகள் மீண்டும் வழமைக்கு!

ஸ்ரீலங்கன் விமான சேவைகள் மீண்டும் வழமைக்கு!

இன்று (28) பிற்பகல் வேளையில் ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமானப் புறப்பாடுகள் மற்றும் வருகைகள் வழமைக்குத் திரும்பும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

அரசியல் தலையீடுகள் காரணமாக விமானக் கொள்வனவு இரத்துச் செய்யப்பட்டமையினால் விமான நிறுவனம் தற்போதைய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக விமான சேவையின் தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவைகளில் தாமதங்கள் மற்றும் சில விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்ட சம்பவங்கள் அண்மைக்காலமாக பதிவாகியிருந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த பிரச்சினை உக்கிரடைந்துள்ளது.

நேற்று (27) மாத்திரம் 10க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமானதுடன் கிட்டத்தட்ட 03 விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டன.

இந்த விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் இலங்கை சுதந்திர பணியாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஹசந்த யசரத்ன கருத்து வெளியிடுகையில்,

“தற்போது எங்களிடம் 24 விமானங்கள் உள்ளன. அதில் 18 விமானங்கள் மட்டுமே இயங்குகின்றன. மற்றையவையின் இயந்திரங்களில் பிரச்சனைகள் உள்ளன. இது இலங்கைக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து விமான நிறுவனங்களுக்கும் பொதுவான பிரச்சினையாகும். 2021-ல் புதிய விமானங்களை கொள்வனவு செய்ய தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை திட்டமிட்டனர். அப்போது கோப் குழுவின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்களால் விமானங்களை வாங்குவது இரத்து செய்யப்பட்டன. அரசியல் பங்காக ஆக்கப்பட்டதால் அது ரத்து செய்யப்பட்டது. இந்த நேரத்தில் சுற்றுலா மிகவும் சிறப்பாக உள்ளது. உண்மையில் விமானங்கள் இருந்தால், செயல்பாடுகள் மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கும். விமானங்கள் இல்லாதது மிகப்பெரிய பிரச்சனையாகும்” என்றார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இலங்கை சுதந்திர பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜனக விஜயபதிரத்ன தெரிவிக்கையில்,

“தேசிய விமான நிறுவனம் அரசு நிறுவனமாக இருந்தாலும் இந்த தொழிலை அரசு தொழிலாக செய்ய முடியாது. உடனடியாக முடிவெடுக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும். இன்று விமானம் தொழில்நுட்பக் கோளாறில் வேறு நாடுகளில் சிக்கினால் விமான பொறியியலாளர் ஒருவரை அந்நாட்டுக்கு அனுப்ப அமைச்சரின் அனுமதி தேவை. இந்த வியாபாரத்தைப் பற்றிய புரிதல் இல்லாத அமைச்சர்கள், கோப் குழு உறுப்பினர்கள் முடிவுகளை எடுப்பதால் தான் முழு நாடும் இன்று இந்த கதியை எதிர்கொள்கிறது.” என்றார்.

கேள்வி – இந்தப் பிரச்சினையை விரைவில் தீர்க்க இலங்கைக்கு வழி உள்ளதா?

இதற்கு பதில் வழங்கிய அந்த சங்கத்தின் செயலாளர் ஹசந்த யசரத்ன,

“சமீபத்தில், காத்திருப்புப் பட்டியல் அடிப்படையில் இரண்டு பெல்ஜிய விமானங்கள் வாங்கப்பட்டன. அதனால்தான் இந்த நடவடிக்கை வழக்கமாக மேற்கொள்ளப்படுகிறது. இன்று மாலைக்குள், அனைத்து தாமதங்களும் சீர்செய்யப்பட்டு, விமானச் செயல்பாடுகள் வழக்கம் போல் இடம்பெறும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றார்.

CATEGORIES
TAGS
Share This