“தானியங்கி கார்” திட்டத்தை கைவிடும் ஆப்பிள்!
சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க உலகம் முழுவதும் கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், உலகின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள், மின்சார வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இதில், ஐபோன் (iPhone) எனும் உயர் தொழில்நுட்ப ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனமும் களம் இறங்கியது.
“அட்டானமஸ் வெஹிகிள்” (autonomous vehicle) எனப்படும் ஓட்டுனர் இன்றி தானாக இயங்கும் கார்களை உற்பத்தி செய்யும் திட்டத்தில் ஆப்பிள் ஈடுபட்டு பல பில்லியன் டாலர்கள் முதலீடு செய்தது.
சுமார் 2 ஆயிரம் வல்லுனர்கள் இதில் பணியாற்றி வந்தனர்.
இத்தகைய வாகனங்களில் பிற கார்களில் உள்ளதை போல் “ஸ்டியரிங் வீல்” மற்றும் “பிரேக்”, “கிளட்ச்”, “ஆக்சிலரேட்டர்” போன்ற பெடல்கள் இருக்காது. இதன் இயக்கம் “குரல்” மூலம் இருக்குமாறு உருவாக்கப்பட்டு வந்தது.
ஆனால், இதுவரை இத்திட்டம் எதிர்பார்த்த பலனை தரவில்லை. தானியங்கி காரை உருவாக்க மேலும் பல வருடங்கள் ஆகலாம் என தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, இந்த தானியங்கி கார் உருவாக்க திட்டத்தை ஆப்பிள் நிறுவனம் கைவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) துறை வளர்ச்சி அடைந்து வருவதால், அதில் முதலீடுகளை செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் இது குறித்து தற்போது வரை அதிகாரபூர்வ கருத்து தெரிவிக்கவில்லை.
அமெரிக்காவின் டெஸ்லா நிறுவன கார்களுக்கு சீனாவின் பிஒய்டி (BYD) நிறுவனம் போட்டியாக உள்ளதால், டெஸ்லா, மின்சார கார்களின் விலையை குறைத்தது குறிப்பிடத்தக்கது.
அதிகரிக்கும் உற்பத்தி செலவு மற்றும் எதிர்பார்த்த அளவு அதிகரிக்காத தேவை ஆகிய காரணங்களால் மின்சார கார் சந்தையில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆப்பிள் சரியான முடிவைத்தான் எடுத்துள்ளதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்.