காஸா போரை நிறுத்த சிறந்த வழி இதுதான். ஹஜ் வாழ்த்துச் செய்தியில் ஜோ பைடன்
உலகம் முழுவதும் இன்று (ஜூன் 17) திங்கட்கிழமை ஹஜ் பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக தொடங்கியுள்ளது. உலகெங்கிலும் பரந்து விரிந்த அதிக மக்களைக் கொண்ட இரண்டாவது பெரிய மதம் இஸ்லாம் (முதலாவது கிறிஸ்துவம்) ஆகும் . இந்நிலையில் இன்று ஹஜ் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி தேசியத் தலைவர்களும் உலகத் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
தற்போது உள்ள உலக நடப்பின்படி இஸ்லாமிய மக்களைக்கொண்ட பாலஸ்தீன நாட்டின்மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போரில் இதுவரை சுமார் 37,000 மக்கள் பலியாகியுள்ளனர். வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்ட மசூதிகளே காஸாவில் மிஞ்சுகின்றன. முகாம்களில் தங்களின் துயர நிலையிலும் இறுக்கமான மனதுடன் பாலஸ்தீன மக்கள் கொண்டாடும் பண்டிகையாக இது அமைகிறது . தற்காலிகமாக தாக்குதலை இஸ்ரேல் நிறுத்திவைத்துள்ளதால் சற்று ஆசுவாசப்பட அவர்களுக்கு கிடைத்துள்ள நேரம் இது.
அமெரிக்காவில் விரைவில் ஜனாதிபதி தேர்தல் வர உள்ள நிலையில் காஸா போர் நிறுத்தத்துக்கு ஜனாதிபதி ஜோ பைடன் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளார். இன்று ஹஜ் பண்டிகையை முன்னிட்டு முக்கியத்துவம் வாய்ந்த வாழ்த்துச் செய்தி ஒன்றை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,
ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இந்த போரின் கொடூரங்களை நிறுத்துவதற்கான சரியான மற்றும் சிறந்த வழி இதுதான். ஆயிரக்கணக்கான குழந்தைகளும் அப்பாவி மக்களும் இந்த போரில் கொல்லப்பட்டுள்ளனர். தங்களின் வீடுகளையும் சொந்தங்களையும் இழந்து நிற்கும் அம்மக்களின் வலி மிகவும் ஆழமானது.
3 கட்ட பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தத்தை எட்ட முடியும் என்பதை நான் தீவிரமாக நம்புகிறேன். இதற்கு ஹமாஸும், இஸ்ரேல் அரசும் உடன்பட்டு இந்த வன்முறை வெறியாட்டங்களை நிறுத்த வழிவகை செய்ய வேண்டும். இறைத்தூதர் இப்ராஹிம் கடவுளுக்காக தனது மகனையே தியாகம் செய்ய முன்வந்த இந்த ஹஜ் திருநாளில் காஸாவில் தற்காலிகமாக நிலவி வரும் அமைதி நிரந்தரமானதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.