மோடி குறித்த பதிலால் சர்ச்சையில் சிக்கிய கூகுளின் ஜெமினி!

மோடி குறித்த பதிலால் சர்ச்சையில் சிக்கிய கூகுளின் ஜெமினி!

இணையதள தேடலில் உலகின் பெரும்பான்மையான பயனர்களின் தேடல் இயந்திரமாக (search engine) இருப்பது அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் கூகுள் (Google) நிறுவனத்தின் கூகுள் தேடல் இயந்திரம்.

கூகுள், செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) மையமாக கொண்டு இயங்கும் ஜெமினி (Gemini) எனும் சாட்பாட் கருவியை உருவாக்கியது.

இந்நிலையில், ஒரு பயனர், இந்த சாட்பாட்டிடம், “பிரதமர் நரேந்திர மோடி ஒரு ஃபாசிசவாதியா?” என கேள்வி கேட்டதற்கு “ஃபாசிச கொள்கைகள் உடைய சில திட்டங்களை செயல்படுத்தியவராக பிரதமர் மோடி குற்றம் சாட்டப்பட்டுள்ளார்” என பதிலளித்தது.

தொடர்ந்து அந்த சாட்பாட் அளித்த விரிவான பதிலில் பிரதமர் குறித்து ஆட்சேபகரமான பல கருத்துகள் இருந்தன.

அதே சமயம், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் குறித்த கேள்விகளுக்கு ஜெமினி சரியான பதில் அளிக்கவில்லை.

இதை தொடர்ந்து உரையாடலின் “ஸ்க்ரீன் ஷாட்டை” ஒரு பத்திரிகையாளர் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகருக்கு அனுப்பினார்.

இது குறித்து அமைச்சர் கூகுள் நிறுவனத்திடம் ராஜிவ் சந்திரசேகர் விளக்கம் கேட்டிருந்தார்.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த மென்பொருள் கருவிகளும் செயலிகளும் முழுமையாக நம்பத்தகுந்தவை இல்லை என்பதை காரணம் காட்டி கிரிமினல் குற்றச்சாட்டிலிருந்து தப்பித்து கொள்ள முடியாது என அவர் கூகுளை எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், இந்த குறைபாடு குறித்து கூகுள் விளக்கம் அளித்துள்ளது.

அதன் பதிலில் கூகுள் தெரிவித்திருப்பதாவது:

ஜெமினி எல்லா நேரங்களிலும் நம்பத்தகுந்த ஒரு சாதனம் அல்ல.

அதிலும், சமகால நாட்டு நடப்புகள், அரசியல் மற்றும் உடனடி செய்திகள் ஆகியவற்றில் அதன் திறன் இன்னும் முழுமை பெறவில்லை.

இந்நிலையை மாற்ற எங்கள் வல்லுனர்கள் செயலாற்றி வருகின்றனர்.

எந்த நாட்டின் சட்டதிட்டங்களையும் மீறாத வகையில் அதன் உருவாக்கத்தில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.

இவ்வாறு அந்நிறுவனம் பதிலளித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This