இந்திய கடற்தொழிலாளர்களின் நியாயப்படுத்தலை ஏற்க முடியாது!

இந்திய கடற்தொழிலாளர்களின் நியாயப்படுத்தலை ஏற்க முடியாது!

கடற்தொழிலாளர் கைது காரணமாக கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்தோம் என்ற இந்திய கடற்தொழிலாளர்களின் நியாயப்படுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டின் சட்டத்துக்கு அமைவாகவே நாங்கள் செயற்படுகிறோம். அடுத்த ஆண்டு திருவிழாவுக்கு முன்னர் சுமுகமான தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கிறேன் என கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார்.

கச்சத்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா வெள்ளிக்கிழமை (23) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சனிக்கிழமை (24) நிறைவடைந்தது. திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கடற்படை தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் தேசிய நல்லிணக்கத்துக்கு கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா சிறந்த எடுத்துக்காட்டாக காணப்படுகிறது. இனம், மதம், மொழி என்ற அடிப்படையில் எவ்வித வேறுபாடுகளுமில்லாமல் இலங்கையர் என்ற அடிப்படையில் நாட்டு மக்கள் அனைவரும் இந்த திருவிழாவில் கலந்துகொண்டதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

கச்சத்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வரலாற்று சிறப்பு மிக்க வருடாந்த திருவிழாவை சிறப்பான முறையில் நடத்துவதற்கு வழங்கிய சகல தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய மற்றும் இலங்கையின் உறவின் பாலமாக இந்த திருவிழா அடையாளப்படுத்தப்படுகிறது.

இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்படுவதால் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாக இந்திய கடற்தொழிலாளர்கள் குறிப்பிடும் நியாயப்படுத்தலை ஏற்றுக்கொள்ள முடியும். இலங்கையின் சட்டத்துக்கு அமையவே கைதுகள் இடம்பெறுகின்றன. சட்டத்தை மீறும்போது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது எமது பொறுப்பாகும்.

இலங்கை – இந்திய கடற்தொழிலாளர் பிரச்சினை பல ஆண்டுகாலமாக தொடர்கிறது. இதற்கு பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். அடுத்த திருவிழாவுக்கு முன்னர் முரண்பாடற்ற தீர்வு ஒன்று காணப்பட வேண்டும். இந்திய கடற்தொழிலாளர்கள் வழமை போல் திருவிழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்றார்.

CATEGORIES
TAGS
Share This