விவசாயிகளுடன் இன்று 4ஆவது கட்டமாக மத்திய அரசு பேச்சுவார்த்தை!

விவசாயிகளுடன் இன்று 4ஆவது கட்டமாக மத்திய அரசு பேச்சுவார்த்தை!

வேளாண் விலை பொருட்களின் குறைந்த பட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், கடன் தள்ளுபடி, உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை கடந்த 13ஆம் திகதி தொடங்கினர்.

பஞ்சாபில் இருந்து புறப் பட்ட விவசாயிகள் பஞ்சாப்-அரியானா இடையே ஷம்பு எல்லையிலும் கனாரி எல்லையிலும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. விவசாயிகளை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இன்று 6ஆவது நாளாக விவசாயிகளின் போராட்டம் நீடித்து வருகிறது.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாய சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மூன்று முறை நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இன்று 4-வது முறையாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மத்திய அரசு சார்பில் அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, பியூஸ் கோயல், நித்யானந்த் ராய் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்து உள்ளது.

பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி பொதுச் செயலாளர் சர்வன் சிங் பாந்தர் கூறும்போது, அரசுடன் நான்காவது கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறோம். அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டு உள்ளது. மத்திய மந்திரிகளிடம் பேசி தீர்வு காண்பதாக கூறியுள்ளது என்றார்.

இந்நிலையில் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் வருகிற 21ஆம் திகதி உத்தரப்பிரதேசம், அரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 4 மாநிலங்களில் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத் அறிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This