மத அடிப்படையிலான சில சட்டங்களை நீக்கியது உச்ச நீதிமன்றம்!
மலேசியாவின் வடகிழக்கில் உள்ள கெலன்டான் (Kelantan) பகுதியிலிருந்து 2 இஸ்லாமிய பெண்கள், ஷரியத் அடிப்படையில் உருவாகியிருந்த சில சட்டங்களுக்கும், அவற்றிற்கான தண்டனைகளுக்கும் எதிராக வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இவ்வழக்கில், கடந்த இரு தினங்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் ஷரியத் அடிப்படையில் இருந்த கிரிமினல் சட்டங்களை நீக்கி விட்டது.
இது தொடர்பான விசாரணையில் 9 பேர் கொண்ட பெஞ்ச் அளித்த தீர்ப்பில், 8-1 எனும் எண்ணிக்கையில், ஷரியத் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்த 16 சட்டங்களை நீக்கி விட்டது.
இவற்றில் சில பாலியல் குற்றங்கள், குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் பாலியல் தாக்குதல்கள், பொய் சாட்சி கூறுதல், மத வழிபாட்டு தலங்களை அவமதித்தல் உள்ளிட்ட பல குற்றங்களுக்கான சட்டங்கள் அடங்கும்.
மலேசியாவின் மத்திய சட்டத்தில் இவை முன்னரே அடங்கும் என்பதால், தனியாக ஷரியத் சட்டத்தின்படி இவை தேவையில்லை என தீர்ப்பாகி உள்ளது.
மலேசியாவில் இரட்டை சட்ட முறை கடைபிடிக்கப்படுகிறது. தனி நபர் மற்றும் குடும்பங்கள் சார்ந்த சிக்கல்களுக்கு ஷரியத் சட்டமும், பிற விஷயங்களுக்கு பொது சட்டமும் உள்ளது.
மலேசியாவின் 33 மில்லியன் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பூர்வீக மலேய மக்கள். இவர்கள் இஸ்லாமியர்களாகவும், இவர்களை தவிர சீனர்களும், இந்தியர்களும் மக்கள் தொகையில் உள்ளனர்.
தனது மகளுடன் இணைந்து இவ்வழக்கை தாக்கல் செய்த நிக் எலின் நிக் அப்துல் ரஷீத் (Nik Elin Nik Abdul Rashid) எனும் வழக்கறிஞர், “மலேசிய அரசியலமைப்பு சட்டம்தான் உயர்ந்தது என இத்தீர்ப்பில் தெளிவாகி உள்ளது” என தெரிவித்தார்.
2022 பொது தேர்தலில் வென்ற பிரதமர் அன்வர் இப்ராகிம், இந்த தீர்ப்பினால் அரசியல் ரீதியாக விளையும் மாற்றங்களை சந்திப்பது சவாலாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.